ஒப்பிட்டு பார்க்கும் மனநிலை சரியா? தவறா?


ஒப்பிட்டு பார்க்கும் மனநிலை சரியா? தவறா?
x
தினத்தந்தி 30 Oct 2022 1:30 AM GMT (Updated: 30 Oct 2022 1:30 AM GMT)

பெருந்தன்மை, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை போன்றவை இருந்தாலே ஒப்பிட்டுப் பார்த்து வேதனைப்படும் சூழ்நிலை வராது.

னிதர்கள் அனைவருக்கும் இருக்கும் ஒரு குணம், பிறரை தன்னோடு ஒப்பிட்டுப் பார்ப்பது. ஒரே தாய்க்கு பிறந்த குழந்தைகள் வளர்ந்து வரும் போதே ஒருவருக்கொருவர் ஒப்பிட்டுப் பார்க்கும் வழக்கம் ஆரம்பித்து விடுகிறது. "உங்களுக்கு அக்கா மீது மட்டும்தான் பாசம் அதிகம்" என பெற்றோரிடம் தங்கை குற்றம் சாட்டுவதும், "தங்கை தான் உங்களுக்கு செல்ல மகள்" என்று அக்கா குறை சொல்வதும் பல குடும்பங்களில் அன்றாடம் நடக்கிறது.

ஆனால், பெற்றோர் தங்கள் குழந்தைகள் அனைவரிடமும் பாரபட்சம் இன்றி பாசம் பொழிவார்கள். அதை முழுமையாக அறியாத குழந்தைகள் பெற்றோரை குற்றம் சாட்டுவார்கள். குறிப்பாக பெண் குழந்தைகளிடையே இந்த பிரச்சினை அதிகமாக இருக்கும். இவர்களுக்கு திருமணம் ஆகி தாய்-தந்தை என்ற நிலையை அடையும்போதுதான், தனது பெற்றோர் தங்களிடம் எந்த வேறுபாடும் காட்டவில்லை என்பதை உணர்வார்கள்.

பெருந்தன்மை, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை போன்றவை இருந்தாலே ஒப்பிட்டுப் பார்த்து வேதனைப்படும் சூழ்நிலை வராது. அலுவலகங்களில் சக ஊழியரைத் தன்னுடன் ஒப்பிட்டு பார்த்து மன உளைச்சல் அடையும் பெண்கள் அதிகம் இருப்பார்கள். "என்னை விட குறைந்த பணி அனுபவம் உள்ள பெண்ணுக்கு அதிக சம்பளத்தில் உயர்ந்த பதவியை தந்தது நியாயமா?" என்று புலம்புவார்கள். இதில் நியாயம் இருந்தால் நிர்வாகத்திடம் நேரடியாகவோ, கடிதம் மூலமோ பணிவுடன் கேட்டு வேண்டிய தகவலைப் பெறலாம்.

எனவே, ஒப்பிட்டு பார்க்கும் எந்த விஷயமாக இருந்தாலும், அது சரியானதா என்று யோசித்து செயல்படுவதே நல்லது. மற்றவர்கள் நிறைவாக வாழ்வதை எண்ணி கலங்காமல், நாமும் ஒருநாள் நல்ல நிலைக்கு வருவோம் என்ற அசைக்க முடியாத தன்னம்பிக்கையும், கடும் உழைப்பும் இருந்தால் நிச்சயம் நிம்மதியான வாழ்க்கையைப் பெற முடியும். அதை விடுத்து ஒப்பிட்டுப் பார்த்து வாழ்ந்தால் துன்பமே முடிவாக இருக்கும்.

பிறரை ஒப்பிட்டு வாழ நினைப்பது தவறு என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து, அவரவர் வேலையை முழுமனதோடு செய்ய வேண்டும். ஒப்பிட்டு பார்த்து வீண் கவலை அடைவதால், ஆரோக்கியம் பாதிக்கும். எனவே தன்னம்பிக்கையோடு முயற்சியும், உழைப்பும் இருந்தால் வாழ்வில் உயரலாம்.


Next Story