தமிழில் படம் தயாரிக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் தோனி

தமிழில் திரைப்படத் தயாரிப்பில் களம் இறங்கிய இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் மகேந்திரா சிங் தோனி. தோனி என்டர்டெய்ன்மெண்ட் சார்பில் முதல் படத்தை தமிழில் தயாரிக்கின்றனர்.
தமிழில் படம் தயாரிக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் தோனி
Published on

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் தோனியும், அவரது மனைவி திருமதி சாக்ஷி சிங் தோனியும் இணைந்து 'தோனி என்டர்டெயின்மெண்ட்' என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். இந்நிறுவனம் மூலம் தமிழில் திரைப்படம் ஒன்றை தயாரிக்கின்றனர். திருமதி சாக்ஷி சிங் தோனியின் கருத்தாக்கத்தை மையமாக கொண்டு, குடும்ப பொழுதுபோக்கு படமாக தயாராகும் இப்படம் விரைவில் தொடங்குகிறது.

இந்நிறுவனம் அனைத்து மொழிகளிலும் பொழுதுபோக்கு அம்சம் உள்ள திரைப்படங்களை தயாரிப்பதற்காக களம் இறங்கி இருக்கிறது. இதற்கான பல கட்ட தயாரிப்பிலும் ஈடுபட்டிருக்கிறது. குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடிய ஐபிஎல் போட்டிகளை அடிப்படையாகக் கொண்டு பிரபலமான 'ரோர் ஆஃப் தி லயன்' எனும் ஆவணப் படத்தை தயாரித்து வெளியிட்டிருக்கிறது. 'வுமன்'ஸ் டே அவுட்' என்ற பெயரில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு குறும்படத்தையும் தோனி என்டர்டெய்ன்மெண்ட் தயாரித்திருக்கிறது.

இவர்களின் முதல் திரைப்படத்தை 'அதர்வா- தி ஆர்ஜின்' எனும் கிராஃபிக் நாவலை எழுதிய ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். தமிழில் தோனி என்டர்டெய்ன்மெண்ட்டின் முதல் தயாரிப்பை இயக்கும் வாய்ப்பை பெற்றிருக்கும் ரமேஷ் தமிழ்மணி பேசுகையில், ''சாக்ஷி தோனி எழுதிய கதையின் கருவைப் படிக்கும்போதே இதன் தனித்துவத்தை என்னால் உணரமுடிந்தது. புத்தம் புதிதாய் இருந்த இந்த கதை குடும்பங்களை மகிழ்வூட்டி, சிரிக்கவைத்து சிந்திக்கவைக்கும் என்று நம்பினேன். இந்தக் கருவைத் திரைக்கதையாக்கி திரைப்படமாக்கும் வாய்ப்பை அவர் எனக்கு வழங்கியதைப் பெருமையாகக் கருதுகிறேன். இந்தப் பயணத்தில் பங்கேற்பதில் ஒட்டுமொத்தக் குழுவும் முழு ஆர்வத்தில் இணைந்துள்ளது. ஒரு சிறந்த திரைப்படத்தை மக்களுக்குக் கொடுக்கப்போகிறோம் என்ற நம்பிக்கையில் துளிர்க்கும் ஆர்வம் அது" என்று ரமேஷ் தமிழ்மணி கூறியுள்ளார்.

இப்படத்தில் பணியாற்றும் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com