சிறையில் கொசுவலை கேட்கும் எல்கர் பரிஷத் கைதிகள்- சிறப்பு கோர்ட்டில் மனு

சிறையில் தங்களுக்கு கொசுவலை வழங்க வேண்டும் என்று எல்கர் பரிஷத் கைதிகள் என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
சிறையில் கொசுவலை கேட்கும் எல்கர் பரிஷத் கைதிகள்- சிறப்பு கோர்ட்டில் மனு
Published on

மும்பை,

சிறையில் தங்களுக்கு கொசுவலை வழங்க வேண்டும் என்று எல்கர் பரிஷத் கைதிகள் என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

கொசு தொல்லை

புனே அருகே உள்ள பீமா கோரேகாவில் கடந்த 2018-ம் ஆண்டு போர் நினைவு தினத்தில் பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்த வன்முறைக்கு முந்தைய நாள் நடந்த எல்கர் பரிஷத் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய சமூக போராளிகள் தான் காரணம் எனக்கூறி பலர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் கைதான ஆனந்த் டெல்டும்டே மற்றும் சாகர் கோர்கே ஆகியோர் நவிமும்பை தலோஜா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் சிறையில் அதிகளவில் கொசுக்கள் இருப்பதாகவும், கொசுக்கடியில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள கொசு வலை வழங்க வேண்டும் என்று மும்பை சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

தற்கொலை ஆயுதம்

இது தொடர்பாக ஆனந்த் டெல்டும்பே தாக்கல் செய்த மனுவில், "தலோஜா சிறையில் அடைக்கப்பட்டு உள்ள நான் பல நோய்களால் பாதிக்கப்பட்டேன். சிறையில் கொசுக்கள் மலிந்து காணப்படுவதால், டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் எளிதில் தாக்க வாய்ப்பு உள்ளது. கொசுக்கடியில் இருந்து தப்பிக்க கொசுவலை மட்டுமே தீர்வு என்பதால், அதை வழங்க உத்தரவிட வேண்டும்" என்று கூறிப்பிட்டுள்ளார்.

சாகர் கோர்கே தனது மனுவில், "இதே சிறையில் உயர் பாதுகாப்பு அறைகளில் அடைக்கப்பட்டுள்ள 18 கைதிகளுக்கு கொசு வலை வழங்கப்பட்டு உள்ளது. நாங்கள் எல்கர் பரிஷத் வழக்கு கைதிகள் என்ற ஒரே காரணத்திற்காக கொசுவலை வழங்கப்படவில்லை. கைதிகள் தூக்குப்பேட்டு தற்கொலை செய்து கொள்வதற்கு கொசுவலை சிறந்த ஆயுதம் என்று கூறி அதனை வழங்க சிறை நிர்வாகம் மறுத்து வருகிறது. நாட்டில் எந்த ஒரு கைதியும் இதுநாள் வரை கொசுவலையால் தற்கொலை செய்து கொண்டதாக உதாரணம் இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுக்கள் மீது பதிலளிக்க சிறை நிர்வாகத்துக்கு நீதிபதி உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை தள்ளி வைத்தார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com