

ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில், கப்ரான் கிராமத்தில் இருக்கும் காவலர்கள் வீட்டுக்குச் சென்ற பயங்கரவாதிகள், அவர்களை கடத்தி சென்றனர். கடத்தப்பட்ட காவலர்கள் ஃபிர்தவுஸ் அஹ்மத் குச்சே, குல்தீப் சிங், நிசார் அஹ்மத் தோபி மற்றும் ஃபயாஸ் அஹ்மத் பட் என்று தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், கடத்திச்செல்லப்பட்ட 4 காவலர்களில் 3 பேர் பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. ஒரு காவலர் மட்டும் உள்ளூர் மக்களின் உதவியோடு மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது. காவல்துறை பணியில் இருந்து விலக வேண்டும் என்று பயங்கரவாதிகள், காவலர்களை வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
சமீப காலமாக காஷ்மீரில் பயங்கரவாதிகள் தங்கள் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாமல் தடுமாறி வருகின்றனர். கல்வீச்சு சம்பவங்கள், போராட்டமும் குறைந்துள்ளதால், விரக்தி அடைந்த பயங்கரவாதிகள், காவல்துறையினரை குறிவைத்துள்ளதாக உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறினார். இந்தியா-பாகிஸ்தான் இடையே மீண்டும் பேச்சுவார்த்தைக்கு தயாராகி வரும் நிலையில், காஷ்மீரில் பயங்கரவாதிகள் வெறிச்செயல் அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.