

கவுகாத்தி,
அசாமின் கோக்ரஜார் மாவட்டத்துக்கு உட்பட்ட செங்மாரி பகுதியில் அரசு வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று அதிகாலை பயங்கர ஆயுதங்களுடன் இந்த வங்கிக்கு வந்த கொள்ளையர்கள் சிலர், வங்கியில் கொள்ளையடிக்க முயன்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், கொள்ளையர்களை மடக்கிப்பிடிக்க முயன்றனர். அப்போது அவர்கள், போலீசார் மீது துப்பாக்கியால் சுட்டனர்.
இதைத்தொடர்ந்து போலீசாரும் திருப்பி தாக்குதல் நடத்தினர். இதில் 3 கொள்ளையர்கள் படுகாயம் அடைந்தனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவர்கள், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மீதமுள்ள கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.
சுட்டுக்கொல்லப்பட்ட கொள்ளையர்களிடம் இருந்து 2 கைத்துப்பாக்கிகள், கியாஸ் சிலிண்டர்கள் மற்றும் துளையிடும் கருவிகள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
கொள்ளையர்களை சுட்டுக்கொன்றதன் மூலம் வங்கிக்கொள்ளையை தடுத்து நிறுத்திய போலீசாரை மாநில முதல்-மந்திரி ஹிமாந்தா பிஸ்வா சர்மா பாராட்டியுள்ளார்.