

புதுடெல்லி,
பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தை பிரதான்மந்திரி அவாஸ் யோஜனா என்ற பெயரில் மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது. இந்த திட்டம், நகர்ப்புற ஏழைகளுக்கு மலிவு விலையில் வீடுகள் வழங்குவதை நோக்கமாக கொண்டிருக்கிறது.
2022-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி டெல்லியில் நேற்று நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் மேலும் 6 லட்சம் வீடுகள் கட்ட மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் இந்த திட்டத்தின்கீழான மொத்த வீடுகளின் எண்ணிக்கை 1 கோடியை தாண்டி உள்ளது.
அடுத்த 3 அல்லது 4 மாதங்களில் மொத்தம் 1 கோடியே 12 லட்சம் வீடுகளுக்குமான அனுமதியை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகம் அளித்து விடும். இவ்வாறு அவர் கூறினார்.