ஊழல் புகாரில் சிக்கிய மந்திரி அனில் பரப்பிடம் 8 மணி நேரம் விசாரணை - அமலாக்கத்துறை கிடுக்கிப்பிடி

ஊழல் புகாரில் சிக்கிய மந்திரி அனில் பரப் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் 8 மணி நேரம் தீவிர விசாரணை நடந்தது.
ஊழல் புகாரில் சிக்கிய மந்திரி அனில் பரப்பிடம் 8 மணி நேரம் விசாரணை - அமலாக்கத்துறை கிடுக்கிப்பிடி
Published on

மும்பை,

மராட்டிய உள்துறை மந்திரியாக இருந்த அனில்தேஷ்முக் மீதான ரூ.100 கோடி மாமூல் புகார் குறித்து சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரம் குறித்து அமலாக்கத்துறையும் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

விசாரணையின் போது மும்பையில் நடந்த 10 துணை கமிஷனர்கள் பணியிடமாற்றத்துக்கு நாக்பூர் வட்டாரப்போக்குவரத்து அதிகாரி பாஜ்ரங் கர்மாதே கோடிக்கணக்கான பணத்தை போக்குவரத்து துறை மந்திரி அனில் பரப்பிடம் வழங்கியது தொடர்பாக கேள்விபட்டதாக அமலாக்கத்துறையிடம் வெடிகுண்டு கார் வழக்கில் கைதான போலீஸ் அதிகாரி சச்சின் வாசே கூறியுள்ளார்.

இதையடுத்து பாஜ்ரங் கர்மாதேயிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி, அவருக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்தினர். இதேபோல மும்பை மாநகராட்சி பட்டியலில் உள்ள மோசடி ஒப்பந்ததாரர்களிடம் விசாரணை நடத்தி அவர்களிடம் இருந்து ரூ.2 கோடி வசூலிக்க சச்சின்வாசேவிடம், அனில் பரப் கூறியதாகவும் கூறப்படுகிறது.

எனவே கடந்த மாதம் 31-ந் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு மந்திரி அனில் பரப்பிற்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது. ஆனால் முன்பே திட்டமிடப்பட்ட அரசு நிகழ்ச்சிகள் இருப்பதால் விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை என அனில் பரப் கூறியிருந்தார்.

இந்தநிலையில் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு அனில் பரப்பிற்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பி இருந்தது. இதையடுத்து அவர் நேற்று தென்மும்பை, பல்லர்டு எஸ்டேட் பகுதியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அவர் காலை 11 மணியளவில் அங்கு வந்தார். மந்திரி அனில் பரப் விசாரணைக்கு வந்ததை அடுத்து பல்லர்டு எஸ்டேட் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் விசாரணைக்கு செல்லும் முன் அனில் பரப் கூறியதாவது:-

இன்று நான் அமலாக்கத்துறை முன் ஆஜராக உள்ளேன். அவர்கள் எதற்கு என்னை அழைத்தார்கள் என்று எனக்கு தெரியாது. எனது மகள், சிவசேனா தலைவர் பால்தாக்கரே மீது சத்தியமாக நான் எந்த தவறும் செய்யவில்லை. எனவே நான் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு செல்கிறேன். நான் விசாரணைக்கு ஒத்துழைப்பேன். அமலாக்கத்துறையின் கேள்விகளுக்கு பதில் அளிப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே அனில் பரப்பிடம் அமலாக்கத்துறையினர் 8 மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணை முடிந்து அவர் இரவு 7 மணி அளவில் வெளியே வந்தார். .

அப்போது அங்கு கூடியிருந்த நிருபர்களிடம் கூறுகையில், "அமலாக்கத்துறையினர் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்தேன். என்னிடம் நடத்தப்பட்ட விசாரணையை தனி நபர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியாது" என்றார்.

ஊழல் புகாரில் சிக்கியுள்ள மந்திரி அனில் பரப் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேக்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com