ஆயுள் தண்டனையில் இருந்து டெல்லி பேராசிரியரை விடுவித்த ஐகோர்ட்டு தீர்ப்பை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

ஆயுள் தண்டனையில் இருந்து டெல்லி பேராசிரியரை விடுவித்த ஐகோர்ட்டு தீர்ப்பை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ஆயுள் தண்டனையில் இருந்து டெல்லி பேராசிரியரை விடுவித்த ஐகோர்ட்டு தீர்ப்பை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
Published on

புதுடெல்லி,

மாவோயிஸ்டுகளுடன் தொடர்பில் இருந்ததாக ஆயுள் தண்டனை பெற்ற வழக்கில் இருந்து டெல்லி முன்னாள் பேராசிரியர் சாய்பாபாவை விடுதலை செய்த மும்பை ஐகோர்ட்டின் உத்தரவை நிறுத்தி வைத்து, அவர் சிறையில் நீடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு இன்று தெரிவித்துள்ளது. ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக மராட்டிய அரசு தாக்கல் செய்த மனுவில் சாய்பாபா மற்றும் பிற குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் இருந்து பதில்கள் கேட்டு வழக்கு விசாரணையை வருகிற டிசம்பர் 8-ந்தேதிக்கு ஒத்தி வைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

மராட்டிய மாநில போலீசார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மாவோயிஸ்டுகளுடன் தொடர்பில் இருந்ததாக மாற்றுதிறனாளியான டெல்லி பல்கலைக்கழக ஆங்கில பேராசிரியர் ஜி.என். சாய்பாபாவை கைது செய்தனர். இதேபோல மகேஷ் திரிகி, பாண்டு போரா நரரோதே, ஹேம் கேஷ்வ்தத்தா மிஸ்ரா, பிரசாந்த் ராகி, விஜய் திரிகி ஆகியேரையும் கைது செய்தனர்.

இவர்கள் மீது மாவோயிஸ்டுகளுடன் தொடர்பில் இருந்ததாகவும், உள்நாட்டு பேரை ஏற்படுத்துதல் மற்றும் உபா சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு இருந்தது. இந்த வழக்கை விசாரித்த கட்சிரோலி செசன்ஸ் கோர்ட்டு 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் பேராசிரியர் ஜி.என். சாய்பாபா உள்பட 6 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது. விடுவிப்பு செசன்ஸ் கோர்ட்டு உத்தரவை எதிர்த்து பேராசிரியர் உள்பட 5 பேரும் மும்பை ஐகோர்ட்டு நாக்பூர் கிளையில் மேல்முறையீடு செய்து இருந்தனர்.

இதில் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த நிலையில் பாண்டு போரா நரரோதே உயிரிழந்தார். இந்த நிலையில் மனு மீதான விசாரணை நீதிபதிகள் ரோகித் தேவ், அனில் பன்சாரே தலைமையிலான அமர்வு முன் நடந்தது. இதில் மனுவை விசாரித்த நீதிபதிகள் மாவோயிஸ்டுகள் தொடர்பான வழக்கில் இருந்து பேராசிரியர் சாய்பாபா உள்பட 5 பேரையும் விடுவித்தனர். மேலும் அவர்களை உடனடியாக ஜெயிலில் இருந்து விடுவிக்கவும் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் மும்பை ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து மராட்டிய அரசு தாக்கல் செய்த மனுவை விடுமுறை நாளான இன்று நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் பேலா எம் திரிவேதி ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட்டு அமர்வு விசாரித்தது. ஆதாரங்களின் விரிவான மதிப்பீட்டிற்குப் பிறகே குற்றம் சாட்டப்பட்டவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர். சமூகத்தின் நலன், இறையாண்மை மற்றும் இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு எதிரான குற்றங்கள் மிகவும் தீவிரமானவை என்று கூறிய நீதிபதிகள் ஐகோர்ட்டு தீர்ப்பை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டனர்.

சாய்பாபா சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பசந்த், சாய்பாபா 90 சதவீதம் உடல் ஊனமுற்றவர், பல நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு 23 வயதில் ஒரு மகள் மற்றும் மனைவி உள்ளனர். அவரது எலும்புகள் நுரையீரலைத் தொடுகின்றன, இது பிரச்சனையை மேலும் சிக்கலாக்குகிறது. எனவே இவற்றை கருத்தில் கொண்டு அவரை மீண்டும் சிறையில் அடைக்கக்கூடாது. அவரது உடல் ஊனம் மற்றும் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அவரை வீட்டுக் காவலில் வைக்க வேண்டும் என்று கூறினார்.

சுப்ரீம் கோர்ட்டு அமர்வு வீட்டுக் காவலுக்கான கோரிக்கையை நிராகரித்தது. மேலும் சாய்பாபா கடுமையான குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டுள்ளார். பொதுவாக. மூளை மிகவும் ஆபத்தான விஷயம். பயங்கரவாதிகள் அல்லது மாவோயிஸ்டுகளுக்கு, மூளைதான் எல்லாமே என்று நீதிபதிகள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com