சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள்: ஊழல் தடுப்பு படை விசாரிக்கிறது, 3 மாதங்களில் அறிக்கை அளிக்க உத்தரவு

சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் வழங்க லஞ்ச விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த ஊழல் தடுப்பு படைக்கு மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. #Sasikala
சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள்: ஊழல் தடுப்பு படை விசாரிக்கிறது, 3 மாதங்களில் அறிக்கை அளிக்க உத்தரவு
Published on

பெங்களூரு,

சசிகலா, சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.

பரப்பனஅக்ரஹாரா சிறையில் முறைகேடுகள் நடப்பதாகவும், சசிகலாவுக்கு சிறையில் சொகுசு வசதிகள் செய்து கொடுக்க ரூ.2 கோடியை அப்போதைய சிறைத்துறை டி.ஜி.பி. சத்திய நாராயணராவ் லஞ்சமாக பெற்றதாகவும் சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா குற்றம்சாட்டினார். இதுகுறித்த அறிக்கையை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தார். இதனையடுத்து அவர் இடமாற்றம் செய்யப்பட்டார். சிறைத்துறை முறைகேடு குறித்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் உயர்மட்ட குழு விசாரணை நடைபெற்றது.

இந்த விசாரணை அறிக்கை மாநில அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், சிறையில் சில முறைகேடுகள் நடப்பது பற்றி கூறப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஆனாலும், சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க சத்திய நாராயணராவுக்கு லஞ்சம் வழங்கப்பட்டதா? என்பது குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. இந்த நிலையில் பரப்பனஅக்ரஹாரா சிறை முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஊழல் தடுப்பு படைக்கு, மாநில அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. ரூ.2 கோடியை லஞ்சமாக பெற்றுக் கொண்டு சிறையில் உள்ள சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுத்ததாக சிறைத்துறை முன்னாள் டி.ஜி.பி. சத்திய நாராயணராவ் மீது சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா குற்றம்சாட்டியது குறித்து விசாரணை நடத்த வேண்டும்.

இந்த விசாரணையின் அறிக்கையை 3 மாதத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

மேலும், இதே விவகாரத்தில் சத்திய நாராயணராவ், ரூபா ஆகியோர் தங்களின் பணி நடத்தை விதிகளை மீறி செயல்பட்டனரா? என்பது குறித்து விசாரிக்க, ஆள்சேர்ப்பு மற்றும் நிர்வாக சீர்த்திருத்த துறையின் கூடுதல் தலைமை செயலாளருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com