அகஸ்டா வெஸ்ட்லேண்ட் வழக்கு: இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேலுக்கு ஜாமீன் வழங்கியது சுப்ரீம் கோர்ட்டு

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் வழக்கில் இதே வேகத்தில் விசாரணை நடத்தினால் 25 ஆண்டுகள் ஆனாலும் விசாரணை முடிவடையாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
புதுடெல்லி:
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் முறைகேடு வழக்கில், இடைத்தரகராக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள கிறிஸ்டியன் மைக்கேல் ஜேம்ஸ், 2018-ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் கைது செய்யப்பட்டு, பின்னர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். இந்தியாவில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. விசாரணை நிறைவடையாததால் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமீன் மனுக்களை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில், கிறிஸ்டியன் மைக்கேல் ஜேம்சுக்கு ஜாமீன் வழங்க மறுத்து டெல்லி ஐகோர்ட்டு கடந்த ஆண்டு செப்டம்பர் 25-ம் தேதி உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு மீதான விசாரணை நிறைவடைந்த நிலையில், அவருக்கு இன்று ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
விசாரணை நீதிமன்றத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, ஜேம்ஸ் ஜாமீனில் விடுவிக்கப்படுவார் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
முன்னதாக சி.பி.ஐ. தரப்பில் ஆஜராகவேண்டிய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வராததால் அவகாசம் கேட்கப்பட்டது. ஆனால் இந்த கோரிக்கையை நீதிபதிகள் ஏற்கவில்லை. விசாரணையில் ஏற்படும் தாமதம் குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதே வேகத்தில் விசாரணை நடத்தினால் 25 ஆண்டுகள் ஆனாலும் விசாரணை முடிவடையாது என்றனர்.
சி.பி.ஐ. வழக்கில் கிறிஸ்டியன் மைக்கேலுக்கு ஜாமீன் கிடைத்தாலும், பண மோசடி தொடர்பான வழக்கில் அவரது ஜாமீன் மனு டெல்லி ஐகோர்ட்டில் நிலுவையில் இருப்பதால்,அவரால் சிறையில் இருந்து வெளியே வர முடியாது.






