கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்

பெங்களூருவில் கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்
Published on

பெங்களூரு,

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் ரூ.9 ஆயிரம் கோடியில் 66 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட புதிய அணையை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. மாநில அரசு இதற்காக திட்ட அறிக்கை தயாரித்து ஒப்புதல் வேண்டி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது. தமிழக அரசு, இந்த மேகதாது திட்டத்திற்கு எதிர்பு தெரிவித்து வருகிறது.

அதே சமயம் மேகதாது திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி கர்நாடக காங்கிரஸ் கட்சி மேகதாதுவில் இருந்து பெங்களூரு வரை பாதயாத்திரை நடத்தியது. இதையடுத்து கடந்த 4-ந் தேதி தாக்கல் செய்யப்பட்ட 2022-23-ம் ஆண்டு கர்நாடக பட்ஜெட்டில் மேகதாது திட்ட பணிகளை மேற்கொள்ள ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கும் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் மேகதாது விவகாரத்தில் முக்கிய முடிவு எடுக்கும் நோக்கத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டி ஆலோசிக்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்து இருந்தார். அதன்படி இன்று மாலை 4 மணிக்கு பெங்களூரு விதான சவுதாவில் உள்ள மாநாட்டு அரங்கத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மந்திரிகள், கர்நாடக சட்டசபை மற்றும் மேல்-சபையின் அரசியல் கட்சி தலைவர்கள், மேகதாது வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகும் வக்கீல்கள், கர்நாடக சட்ட நிபுணர்கள் கலந்து கொண்டனர்

இந்த கூட்டத்தில் மேகதாது குறித்து சட்ட போராட்டத்தை துரிதப்படுத்துவது குறித்தும், பிற மாநிலங்களுடன் பிரச்சினையில் உள்ள நதிநீர் பங்கீட்டு விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியலில் மேகதாது திட்டம் முக்கிய பிரச்சினையாக உருவெடுக்க தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com