

அயோத்தி
அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படுவதற்கான வேலைகள் தொடங்கி உள்ளன.இந்நிலையில், ராமர் கோவில் மற்றும் ராம ஜென்ம பூமியின் வரலாற்றை எதிர்கால சந்ததி அறிந்துகொள்ளும் வகையில், அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலுக்கு அடியில், 2000 அடி ஆழத்தில் டைம் கேப்சூல் புதைக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியானது. சமூக வலைத்தளங்களில் இந்த தகவல்கள் வேகமாக பரவின.
இந்த நிலையில், ராமர் கோவில் கட்டுமான இடத்தில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி டைம் கேப்சூல் வைக்கப்பட இருப்பதாக வெளியான தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்று ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக அமைக்கப்பட்ட தீர்த்த சேத்ரா அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத் ராய் தெரிவித்துள்ளார்.
ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த சம்பத் ராய் இது பற்றி கூறும் போது, ராமர் கோவில் கட்டுமான இடத்தில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி டைம் கேப்சூல் வைக்கப்பட இருப்பதாக வெளியாகும் அனைத்தும் செய்திகளும் உண்மைக்கு புறம்பானவை. அதுபோன்ற எந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.