பாலியல் பலாத்கார சாமியார் மீது கோபம் அதிகரிப்பு, புகைப்படங்கள் குப்பைக்கு வந்தது!

பாலியல் பலாத்கார வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சாமியார் குர்மீத் சிங்கின் புகைப்படங்கள் இப்போது குப்பைக்கு வந்து உள்ளது.
பாலியல் பலாத்கார சாமியார் மீது கோபம் அதிகரிப்பு, புகைப்படங்கள் குப்பைக்கு வந்தது!
Published on

சண்டிகார்,

இருபெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் தேரா சச்சா சவுதா மத அமைப்பின் தலைவர் சாமியார் குர்மீத் சிங்கிற்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் ஜெயில் தண்டனை விதித்து சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

சாமியார் குர்மீத் சிங்கிற்கு உலகம் முழுவதும் 5 கோடிக்கும் அதிகமான ஆதரவாளர்கள் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதும் அரியானா, பஞ்சாப், டெல்லி, மேற்கு உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றது. இப்போது சாமியாரின் ரகசியங்கள் ஒவ்வொன்றும் வெளிவந்த வண்ணம் உள்ளது. ஒரு பகுதியில் சாமியாரை கடவுள் என்பவர்கள் அவர் வெளியே வருவதை எதிர்நோக்குகிறார்கள். ஆனால் மற்றொரு தரப்பு சாமியாரின் புகைப்படங்களை வைத்து வழிபட்டது தவறு என உணர்ந்து அவருடைய புகைப்படங்களை குப்பையில் தூக்கி வீசி வருகிறார்கள்.

சாமியாரின் உண்மை முகம் தெரியவந்ததை தொடர்ந்து கடும் கோபம் கொண்டு உள்ள ஆதரவாளர்கள் அவர் சம்பந்தப்பட்ட பொருட்களை எல்லாம் குப்பையில் வீசி வருகிறார்கள்.

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகர் தூய்மை ஆய்வாளர் தேவேந்திர ரத்தோர், இவ்வாரம் ஆய்வு செய்ய சென்றபோது பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளார். அதுவரையில் கடவுள் என யாரை மக்கள் பின்தொடர்ந்தார்களோ அவரது புகைப்படத்தை குப்பையில் வீசிவிட்டனர் என்பதுதான் அவருக்கு அதிர்ச்சியை அளித்து உள்ளது. குப்பையில் நூற்றுக்கணக்கான சாமியாரின் புகைப்படங்கள் வீசப்பட்டு உள்ளது. ரத்தோர் பேசுகையில், மீரா சவுக் மற்றும் சுகாதியா பகுதியில் புகைப்படங்கள் வீசியதில் வடிகாலில் நீர் செல்வதில் பெரும் இடையூறு ஏற்பட்டு உள்ளது. சாமியாரின் புகைப்படங்கள் பெருமளவு குப்பையில் வீசப்பட்டு உள்ளது என கூறிஉள்ளார்.

சாமியாரின் பிறந்த ஊரான குருசார் முந்தியா ஸ்ரீகங்காநகர் மாவட்டத்தில்தான் உள்ளது. மாவட்டம் முழுவதும் குப்பைகளில் சாமியாரின் புகைப்படங்களை காணமுடிகிறது என பணியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com