

மதுரா,
உத்தர பிரதேச முதல் மந்திரி ஆதித்யநாத் ஆல்வாரில் நடந்த பேரணி ஒன்றில், அனுமன் வனவாசி என்றும் ஒரு தலித் என்றும் கூறினார். அனைத்து இந்திய சமூகத்தினரை இணைக்க பணியாற்றியவர் என்றும் அவர் கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.
அவரை தொடர்ந்து அவரது அமைச்சரவையின் மந்திரியான நாராயண், அனுமன் ஜாட் சமூகத்தினை சேர்ந்தவர் என கூறினார். அக்கட்சியின் எம்.எல்.ஏ.வான புக்கல், அனுமன் ஒரு முஸ்லிம் என கூறினார். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில், உத்தர பிரதேச விளையாட்டு துறை மந்திரி மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரரான சேத்தன் சவுகான் அம்ரோஹா நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசும்பொழுது, அனுமன்ஜி ஒரு கடவுள். அவரை கடவுளாக நான் வழிபடுகிறேன். நான் ஒரு விளையாட்டு வீரன்.
அனைத்து விளையாட்டு வீரர்களும் சக்தியை வழிபடுவார்கள். அனுமன்ஜி சக்தி மற்றும் வலிமையின் ஓர் அடையாளம். அவர் மல்யுத்தம் செய்பவர். விளையாட்டு வீரராகவும் இருந்துள்ளார். அதனால் மல்யுத்த வீரர்கள் அனைவரும் அவரை வழிபடுவார்கள் என கூறினார்.
அதன்பின் அவர் பேசும்பொழுது, கடவுள்கள் மற்றும் முனிவர்களில் சாதி என்பது கிடையாது. இதேபோன்று அனுமன்ஜி எனக்கு கடவுள். சாதி வழியே அவரை பிரிப்பதற்கு நான் விரும்பவில்லை என கூறியுள்ளார். அனுமனை ஒரு விளையாட்டு வீரர் என சவுகான் கூறினார்.
இந்த நிலையில், உத்தர பிரதேச சங்கராச்சாரியார் அதோக்சஜானந்த் தியோ தீர்த் இன்று கூறும்பொழுது, ஒருபுறம் பா.ஜ.க. ராமர் கோவில் விவகாரத்தினை முன்னிறுத்துகிறது. மற்றொருபுறம் அக்கட்சியின் தலைவர்கள் இந்து மத ஆண் மற்றும் பெண் கடவுள்களை பற்றி அசட்டுத்தனமுடன் பேசி வருகின்றனர். மத உணர்வுகளை புண்படுத்தி வருகின்றனர் என கூறியுள்ளார்.
அயோத்தியாவில் ராமர் கோவில் என்பது அனுமன் இன்றி முழுமை பெறாது. அனுமன்ஜியை ராமர் தனது சகோதரர் பரதனுக்கு இணையாக குறிப்பிட்டு புகழ்ந்துள்ளார் என அவர் கூறியுள்ளார்.
இதனால் அனுமன் விவகாரத்தில் தெளிவான நிலையை பாரதீய ஜனதா கட்சி தெரிவிக்க வேண்டும் என்று கூறிய அவர், அனுமன் பற்றி பேசியதற்கு அக்கட்சியினர் இதுவரை விளக்கம் எதுவும் அளிக்காமல் உள்ளனர் என்றும் கூறியுள்ளார்.
அக்கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் அமைதியாக இருப்பது என்பது ராமர் கோவில் விவகாரத்தினை ஓட்டுகளை கவருவதற்கான ஓர் ஆயுதம் போன்று பாரதீய ஜனதாவினர் பயன்படுத்துகின்றனர் என தெரிகின்றது என்றும் அவர் கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர், அயோத்தியா கோவிலை சங்கராச்சாரியார்களும் மற்றும் தர்மாச்சாரியார்களும் கட்டுவார்கள் என்று கூறினார்.