

ஷாஜகான்பூர்,
உத்தரபிரதேசத்தை சேர்ந்த பா.ஜனதா மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான சுவாமி சின்மயானந்த், தனது ஆசிரமங்கள் சார்பில் ஏராளமான கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார்.
அவரது சட்டக்கல்லூரி ஒன்றில் முதுகலை படிப்பு படித்து வரும் ஒரு மாணவி, சின்மயானந்த் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி விட்டு திடீரென காணாமல் போனார். பிறகு அவர் ராஜஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டு, சுப்ரீம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
மாணவியின் புகாரை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்குமாறு உத்தரபிரதேச அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி, போலீஸ் ஐ.ஜி. நவீன் அரோரா தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. இக்குழு, மாணவி படித்த 2 கல்லூரிகளின் முதல்வர்களிடம் விசாரணை நடத்தியது.
சின்மயானந்த், தன்னை கற்பழித்ததாகவும், ஓராண்டாக தன்னை பயன்படுத்திக் கொண்டதாகவும் அந்த மாணவி பகிரங்கமாக குற்றம் சாட்டினார். ஒரு மொபைல் போன் மற்றும் பென் டிரைவை அவர் சிறப்பு புலனாய்வு குழுவிடம் அளித்தார். பென் டிரைவில், தனது குற்றச்சாட்டை நிரூபிக்கக்கூடிய 43 வீடியோ படங்கள் இருப் பதாக அவர் கூறினார். அவை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதற்கிடையே, சின்மயானந்த் உடல்நலக்குறைவு காரணமாக, கடந்த புதன்கிழமை, லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், மறுநாளே அவர் ஷாஜகான்பூரில் உள்ள வீட்டுக்கு திரும்பினார். அங்கு ஆயுர்வேத சிகிச்சை பெற்றார். அதே சமயத்தில், சின்மயானந்தை கைது செய்யாவிட்டால், தீக்குளிக்கப் போவதாக அந்த மாணவி மிரட்டல் விடுத்தார்.
இந்நிலையில், திடீர் திருப்பமாக, சுவாமி சின்மயானந்த் நேற்று கைது செய்யப்பட்டார். ஷாஜகான்பூரில் உள்ள அவரது வீட்டில் சிறப்பு புலனாய்வு குழு அவரை கைது செய்தது. அப்போது, அவரது வீட்டை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
அவரது உறவினர்களிடம் கைது படிவத்தில் போலீசார் கையெழுத்து பெற்றுக் கொண்டனர். ஆனால், கைது தொடர்பான ஆவணங்களை ஒப்படைக்கவில்லை. பின்தொடர்தல், தவறான நோக்கத்தில் அடைத்து வைத்தல், அச்சுறுத்தல் விடுதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார்.
பின்னர், சின்மயானந்த், மருத்துவ பரிசோதனைக்காக ஷாஜகான்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கூட்டி செல்லப்பட்டார். அப்போது, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மற்ற நோயாளிகளை போலீசார் உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் அவர்கள் அவதியடைந்தனர்.
மருத்துவ பரிசோதனைக்கு பிறகு, தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சின்மயானந்த் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டது.