இடர்பாடு சூத்திரத்தால் காவிரி விவகாரத்தில் தீர்வு ஏற்படாது -முன்னாள் மத்திய மந்திரி சதானந்தகவுடா

இடர்பாடு சூத்திரத்தால் காவிரி விவகாரத்தில் தீர்வு ஏற்படாது என்றும், இரு மாநிலங்களும் பேச்சுவார்த்தை நடத்தினால் தீர்வு காணலாம் என்றும் முன்னாள் மத்திய மந்திரி சதானந்த கவுடா கூறியுள்ளார்.
இடர்பாடு சூத்திரத்தால் காவிரி விவகாரத்தில் தீர்வு ஏற்படாது -முன்னாள் மத்திய மந்திரி சதானந்தகவுடா
Published on

பெங்களூரு:-

தமிழகம் பிரச்சினை கிளப்புகிறது

கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டம் நேற்று பெங்களூரு விதானசவுதாவில் நடந்தது. இதில் கலந்துகொண்ட பிறகு முன்னாள் மத்திய மந்திரியும், பா.ஜனதா எம்.பி.யுமான சதானந்தகவுடா நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-

மழை பொழிவு இல்லாத போது எல்லாம் தமிழகம் காவிரி விவகாரத்தில் தேவையில்லாத பிரச்சினை கிளப்பி வருகிறது. கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டத்தில் காவிரி விவகாரத்தில் சிக்கலை எப்படி தீர்ப்பது என்பது பற்றி அரசியல் கட்சி தலைவர்கள், சட்ட நிபுணர்கள், அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்தோம். தற்போது கர்நாடக அணைகளில் நீர் குறைவாக உள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவுப்படி தமிழகத்திற்கு தண்ணீர் வழங்குவது கர்நாடகத்தின் கடமை என்று தமிழ்நாடு அரசு கூறுகிறது.

பெங்களூருவில் குடிநீர் பிரச்சினை

ஆனால் தற்போது எங்களது மாநில மக்களுக்கே குடிநீர் வழங்க முடியாத நிலை உள்ளது. எனவே நமது மாநில மக்களுக்கு இந்த விவகாரத்தில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன்.

அதுபோல் பெங்களூருவில் குடிநீர் பிரச்சினை இருப்பதால் இதற்கு முக்கியத்துவம் கொடுக்கவும் கூறினேன். தமிழகத்தில் உள்ள அணைகளில் போதுமான அளவு நீர் இருப்பு உள்ளது. அங்குள்ள அணைகளில் உபரி நீரை சேமித்து வைப்பது பற்றி சுப்ரீம் கோர்ட்டு கவனத்தில் கொள்ள வேண்டும்.

இடர்பாடு சூத்திரத்தால் தீர்வு ஏற்படாது

மழை பெய்யாத காலக்கட்டத்தில் அணைகளில் சேமித்து வைக்கப்படும் உபரிநீரை தமிழகம் பயன்படுத்தலாம். இடர்பாடு காலத்தில் காவிரி நீரை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. காவிரி மேலாண்மை ஆணையமும், நிபுணர் குழுவும் இடர்பாடு காலத்தை பற்றி கவனம் செலுத்தவில்லை. அவர்கள் எடுத்துக்கூறினால் மட்டுமே சுப்ரீம் கோர்ட்டு எவ்வளவு நீர் திறக்க வேண்டும் என்பது பற்றி கூற முடியும் என்பது எனது கருத்து.

மழை பெய்யாத காலங்களில் கர்நாடகம், தமிழ்நாடு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும். கணித புள்ளி விவரங்களின் (இடர்பாடு சூத்திரம்) அடிப்படையில் மட்டும் இந்த பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com