

பெங்களூருவில் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
குமாரசாமியின் குடும்பமே தோல்வி
நான் சாமுண்டீஸ்வரி தொகுதியில் தோல்வி அடைந்தது உண்மை தான். மக்கள் அளித்த தீர்ப்புக்கு தலை வணங்குகிறேன். தேர்தலில் வெற்றி, தோல்வி சகஜமானது. குமாரசாமி குடும்பத்தில் தேர்தலில் போட்டியிட்டவர்கள் தோல்வி அடையாமல் வெற்றி பெற்று மட்டுமே வருகிறார்களா?.
குமாரசாமி தோல்வி அடைந்திருக்கிறார். தேவேகவுடா, எச்.டி.ரேவண்ணா, குமாரசாமியின் மகன் கூட தேர்தலில் தோல்வி அடைந்திருக்கிறார்கள். ஜனநாயகத்தில் மக்கள் அளிக்கும் தீர்ப்பே இறுதியானது. இது குமாரசாமிக்கு தெரிவதில்லை.
மத்திய அரசு அனுமதி வழங்க...
நான் குமாரசாமியின் குடும்பத்தினர் முன்பு எதற்காகவும் கை கட்டி நின்றது இல்லை. பதவிக்காக யார் கண்ணீர் வடிப்பார்கள் என்று மக்களுக்கு தெரியும். அதுபற்றி நான் சொல்ல வேண்டியதில்லை. எனக்கு எதிராக பேசினால், அரசியலில் லாபம் கிடைக்கும் என்று குமாரசாமி நினைக்கிறார்.
ஒகேனக்கல் 2-வது கட்ட கூட்டு குடிநீர் திட்டத்திற்காக விரிவான திட்ட அறிக்கையை தமிழக அரசு தயார் செய்துள்ளது. இந்த திட்டத்திற்கு மத்திய பா.ஜனதா அரசு அனுமதி வழங்கக்கூடாது. இந்த திட்டத்திற்கு மாநில அரசும் தீவிரமான எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். மேகதாது அணை கட்டுவதற்கு எந்த விதமான பிரச்சினையும் இல்லை. சுப்ரீம் கோர்ட்டும் எந்த விதமான எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. அதனால் மேகதாதுவில் அணைகட்டும் திட்டத்தை கர்நாடகம் தொடங்க வேண்டும்.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.