காவல்துறையில் சீர்திருத்தம் செய்யவேண்டியது அவசியம்: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு

குற்றங்களை திறம்படச் சமாளிக்க நமது காவல்துறையினரின் திறமையை மேம்படுத்த வேண்டியது அவசியம்.
Image Source: Twitter @PIB_India
Image Source: Twitter @PIB_India
Published on

புதுடெல்லி,

முற்போக்கான, நவீன இந்தியாவில் மக்களின் ஜனநாயக எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக காவல்துறை இருக்க வேண்டும் என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வலியுறுத்தினார்.

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி பிரகாஷ் சிங் எழுதிய இந்தியாவில் காவல்துறை சீர்திருத்தங்களுக்கான போராட்டம் என்ற புத்தகத்தை வெளியிட்டு உரையாற்றினார். இந்த நிகழ்வில் எல்லை பாதுகாப்புபடை முன்னாள் இயக்குனர் பிரகாஷ் சிங், முன்னாள் தலைமை இயக்குநர் , இந்தியா டுடே நிர்வாக ஆசிரியர் கௌசிக் டேகா, இந்திய போலீஸ் அறக்கட்டளை தலைவர் என். ராமச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

அப்போது அவர் பேசியதாவது:-

சைபர் கிரைம் எனப்படும் இணையவழிக் குற்றங்கள் மற்றும் 21ஆம் நூற்றாண்டின் குற்றங்களைத் திறம்படச் சமாளிக்க நமது காவல்துறையினரின் திறமையை மேம்படுத்த வேண்டியது அவசியம்.

காவல் துறையில் அதிக அளவில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புதல் மற்றும் நவீன கால காவல் துறைத் தேவைகளுக்கு ஏற்ப காவல் உட்கட்டமைப்பை வலுப்படுத்துதல் போன்றவை போர்க்கால அடிப்படையில் தீர்க்கப்பட வேண்டிய விஷயங்கள் ஆகும்.

சாமானிய மக்களிடம் காவல்துறையினர் கண்ணியமாகவும் நட்புடனும் இருக்க வேண்டும். இந்த விஷயத்தில் மூத்த காவல்துறை அதிகாரிகளை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும்.

பல ஆண்டுகளாக சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், தேவையான அளவிற்கு முன்னேற்றம் ஏற்படவில்லை. சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதல்களின்படி, மாநிலங்களில் சீர்திருத்தங்களை முறையாகச் செயல்படுத்த வேண்டும்.

நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்தவும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைக்கவும் காவல்துறை சீர்திருத்தங்கள் அவசியம். அமைதியே முன்னேற்றத்திற்கு முக்கியமானது.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் குற்றவாளிகள், பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் மற்றும் சட்டத்திற்குப் புறம்பான சக்திகளின் அனைத்து சாயல்களையும் எதிர்த்துப் போராடி, தங்கள் இன்னுயிரை நீத்த காவலர்களை நினைவு கூர்ந்து அவர் மரியாதை செலுத்தினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com