கேரளாவில் தியேட்டர் உரிமையாளர்களுக்கு சிறப்பு சலுகை; முதல்-மந்திரி பினராயி விஜயன் அறிவிப்பு

கேரளாவில் தியேட்டர் உரிமையாளர்களுக்கு 3 மாத கேளிக்கை வரி ரத்து உள்பட பல சிறப்பு சலுகைகளை முதல்-மந்திரி பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
கேரளாவில் தியேட்டர் உரிமையாளர்களுக்கு சிறப்பு சலுகை; முதல்-மந்திரி பினராயி விஜயன் அறிவிப்பு
Published on

திருவனந்தபுரம்,

கேரளாவில் ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி 50 சதவீத பார்வையாளர்களுடன் தியேட்டர்களை இயக்க அரசு அனுமதி வழங்கியது. ஆனால் அதற்கு சாத்தியமில்லை என தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர், திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர், வினியோகஸ்தர்கள் உள்பட அனைத்து திரைப்பட சங்கத்தினரும் திட்டவட்டமாக மறுத்தனர். மேலும், மின்சார கட்டணம் குறைப்பு, கேளிக்கை வரி ரத்து உள்பட பல்வேறு கோரிக்கைகள் அவர்கள் சார்பில் முன் வைக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று திருவனந்தபுரத்தில் தியேட்டர்களை திறப்பது தொடர்பாக முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் அவசர கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து பினராயி விஜயன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கேரளாவில் திரைப்பட துறையினரின் கோரிக்கையை ஏற்று நடப்பு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான 3 மாத காலத்திற்கு தியேட்டர்களில் கேளிக்கை வரியை ரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. தியேட்டர்கள் கடந்த 10 மாத காலமாக மூடப்பட்டு உள்ளது. இந்த 10 மாத காலத்திற்கான குறைந்த பட்ச கட்டாய மின்சார கட்டணத்தில் 50 சதவீத கட்டண சலுகை அளிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாயத்துகளுக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கிகளை செலுத்த கால அவகாசம் அளிக்கப்படுகிறது. உரிமம் புதுப்பித்தல் மற்றும் அவை தொடர்பான காலாவதி மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. தொழில் வரி குறித்து முடிவு செய்ய மாநில அரசால் முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com