

புதுடெல்லி,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மேலிட குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பெட்ரோலில் கலப்பதற்கான எத்தனால் தயாரிக்கவும், கிருமிநாசினி தயாரிப்பதற்கான ஆல்கஹால் உற்பத்தி செய்யவும் அரிசி கையிருப்பை பயன்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஊரடங்கால் லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களும், அமைப்புசாரா தொழிலாளர்களும், ஏழைகளும் சொல்லொணா துயரங்களை சந்தித்து வருகின்றனர்.
உணவு கிடைக்காமல், பட்டினியின் விளிம்பில் உள்ளனர். அவர்களின் கன்னத்தில் அறைவதுபோல் இம்முடிவு அமைந்துள்ளது. இது மனிதத்தன்மையற்ற செயல்.
இருப்பு வைக்கப்பட்ட அரிசியை ஏழைகளுக்கு இலவசமாக வழங்கவேண்டும் என்று எங்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. ஆனால், மத்திய அரசு அதை செய்யவில்லை.
உணவு தானியம் என்பது மக்களுக்குத்தானே தவிர, எரிபொருளுக்கு அல்ல. அதிலும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையில், பெட்ரோலில் ஓடும் வாகனங்கள் ஊரடங்கால் ஓடாத நிலையில், பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனால் தயாரிக்க மதிப்புமிக்க அரிசியை பயன்படுத்துவது அறிவுக்கு பொருந்தாதது.
பட்டினியோடும், தங்குமிட பற்றாக்குறையாலும் மக்கள் போராடி வரும்போது, கார்ப்பரேட் நிறுவனங்கள் லாபம் சம்பாதிக்க அரிசியை மடைமாற்றம் செய்வதை அனுமதிக்க முடியாது. இது ஒரு குற்றச்செயல்.
ஆகவே, இந்த முடிவை மத்திய அரசு உடனே திரும்பப்பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.