சித்தராமையா போட்டியிடும் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரின் விடுதி உள்பட 2 இடங்களில் வருமான வரித்துறை சோதனை, ரூ.27 லட்சம், முக்கிய ஆவணங்கள் சிக்கின

சித்தராமையா போட்டியிடும் பாதாமி தொகுதியில் உள்ள காங்கிரஸ் வேட்பாளரின் தங்கும் விடுதி உள்பட 2 இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.27 லட்சம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கின.
சித்தராமையா போட்டியிடும் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரின் விடுதி உள்பட 2 இடங்களில் வருமான வரித்துறை சோதனை, ரூ.27 லட்சம், முக்கிய ஆவணங்கள் சிக்கின
Published on

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தேர்தலில் மைசூரு சாமுண்டீஸ்வரி மற்றும் பாகல்கோட்டை மாவட்டம் பாதாமி தொகுதியில் முதல்-மந்திரி சித்தராமையா போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக பாதாமியில் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் காங்கிரஸ் தலைவர்கள் பாதாமி புறநகர் பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் தங்கி உள்ளனர்.

அந்த விடுதி காங்கிரஸ் கட்சி சார்பில் விஜயநகர் தொகுதியில் போட்டியிடும் ஆனந்த்சிங்கிற்கு சொந்தமானது. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு இந்த விடுதியில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள்.

அங்கு இருந்த சித்தராமையாவின் நெருங்கிய ஆதரவாளரும், மேல்-சபை உறுப்பினருமான(எம்.எல்.சி) சி.எம்.இப்ராஹிமிடம் 3 மணிநேரத்திற்கும் மேலாக அதிகாரிகள் விசாரித்ததாக கூறப்படுகிறது.

இதுபோல, தங்கும் விடுதியில் தங்கி இருந்த மற்ற காங்கிரஸ் கட்சியினரிடமும் விசாரணை நடத்திய அதிகாரிகள் விடுதியின் ஒவ்வொரு அறைகளிலும் நேற்று காலை வரை சுமார் 9 மணி நேரம் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு இருந்து முக்கிய ஆவணங்கள், ரூ.11 லட்சத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றி எடுத்து சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதேபோல் அருகில் உள்ள தனியார் ஓட்டலிலும் சோதனை நடத்திய அதிகாரிகள் இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களிடம் இருந்து ரூ.16 லட்சம், முக்கிய சில ஆவணங்களை பறிமுதல் செய்து எடுத்து சென்றதாக தெரிகிறது.

மொத்தம் 2 இடங்களில் நடந்த இந்த சோதனையில் ரூ.27 லட்சமும், முக்கிய ஆவணங்களும் சிக்கியது குறிப்பிடத்தக்கது. இந்த வருமான வரித்துறையினர் சோதனையின் பின்னணியில் பா.ஜனதா இருப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com