மேற்கு வங்காள தேர்தல் வன்முறையை ஆராய நியமிக்கப்பட்ட உள்துறை அமைச்சக குழு கவர்னருடன் ஆலோசனை; பலியானோரின் குடும்பத்தினரையும் சந்தித்தது

மேற்கு வங்காளத்தில் ஓட்டு எண்ணிக்கைக்கு பிந்தைய வன்முறையை ஆராய நியமிக்கப்பட்ட மத்திய உள்துறை அமைச்சக குழு, கவர்னருடன் ஆலோசனை நடத்தியது. பலியானோரின் குடும்பத்தினரையும் சந்தித்தது.
மேற்கு வங்காள தேர்தல் வன்முறையை ஆராய நியமிக்கப்பட்ட உள்துறை அமைச்சக குழு கவர்னருடன் ஆலோசனை; பலியானோரின் குடும்பத்தினரையும் சந்தித்தது
Published on

16 பேர் பலி

மேற்கு வங்காள சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை கடந்த 2-ந் தேதி நடந்தது. அதில், திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடித்ததை தொடர்ந்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்தது. பா.ஜனதாவினரை குறிவைத்து திரிணாமுல் காங்கிரசார் தாக்குதல் நடத்தினர். இதில், 16 பேர் பலியானார்கள். இவர்களில் பெரும்பாலானோர் பா.ஜனதாவினர் என்றும், ஒரு லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி விட்டதாகவும் பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா குற்றம் சாட்டினார்.

இதற்கிடையே, இந்த வன்முறை குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டும், மாநில அரசு அறிக்கை அளிக்கவில்லை. இதனால், கவர்னர் ஜெகதீப் தாங்கரிடம் உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டுள்ளது.

அத்துடன், வன்முறைக்கான காரணங்களை ஆராய 4 பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழுவை உள்துறை அமைச்சகம் அமைத்தது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் தலைமையிலான அக்குழுவினர் நேற்று முன்தினம் மேற்கு வங்காளத்துக்கு சென்றனர். வடக்கு 24 பர்கானாஸ், தெற்கு 24 பர்கானாஸ் ஆகிய மாவட்டங்களில் வன்முறை நடந்த இடங்களை நேரில் பார்வையிட்டனர். வன்முறைக்கு பலியானோரின் குடும்பத்தினரையும், உள்ளூர்வாசிகளையும் நேரில் பார்த்து பேசி, நடந்த சம்பவங்களை கேட்டறிந்தனர்.

மேலும், தலைமை செயலகத்தில், மாநில அரசின் தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி. ஆகியோரை சந்தித்து நிலைமையை கேட்டறிந்தனர். இந்தநிலையில், நேற்று கவர்னர் மாளிகையில் கவர்னர் ஜெகதீப் தாங்கரை மத்திய உள்துறை அமைச்சக குழுவினர் சந்தித்தனர்.

வன்முறை சம்பவங்கள் தொடர்பாக கவர்னருடன் ஆலோசனை நடத்தினர். உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்பி வைக்குமாறு கட்டுக்கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com