டெல்லி தீ விபத்து; தளத்தின் உரிமையாளர் ஆம் ஆத்மி தொண்டர்: பா.ஜ.க.

டெல்லியில் தீ விபத்து நடந்த தளத்தின் உரிமையாளர் ஆம் ஆத்மி கட்சியின் தொண்டர் என பா.ஜ.க. தலைவர் மனோஜ் திவாரி கூறியுள்ளார்.
டெல்லி தீ விபத்து; தளத்தின் உரிமையாளர் ஆம் ஆத்மி தொண்டர்: பா.ஜ.க.
Published on

புதுடெல்லி,

டெல்லியில் மக்கள் நெருக்கடி அதிகம் நிறைந்த ராணி ஜான்சி சாலை பகுதியில் தொழிற்சாலைகள் மற்றும் குடியிருப்பு கட்டிடங்கள் அமைந்துள்ளன. இந்த நிலையில், நேற்று அதிகாலை அந்த பகுதியில் உள்ள அனாஜ் மண்டி என்ற இடத்தில் தொழிற்சாலை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.

இதுபற்றிய தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு உடனடியாக 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சென்றன. அவற்றில் இருந்த 150 தீயணைப்பு துறை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதிகாலை வேளையில் நடந்த இந்த தீ விபத்தில் சிக்கி 43 பேர் பலியானார்கள்.

இச்சம்பவம் பற்றி அறிந்த வடகிழக்கு டெல்லி பா.ஜ.க. எம்.பி.யான மனோஜ் திவாரி உடனே தீ விபத்து நடந்த பகுதிக்கு சென்றார். அவர் கூறும்பொழுது, பா.ஜ.க. சார்பில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.25 ஆயிரமும் இழப்பீட்டு தொகை வழங்கப்படும் என கூறினார்.

இந்த தீ விபத்துக்கு பின்னர் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் சம்பவ பகுதிக்கு சென்றார். அவரை செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டனர். பின்னர் அவர் கூறும்பொழுது, உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.1 லட்சமும் இழப்பீட்டு தொகை வழங்கப்படும். காயமடைந்தோரின் மருத்துவ சிகிச்சைக்கு ஆகும் செலவை அரசு ஏற்கும் என்று கூறினார்.

தீ விபத்துக்கு மின்கசிவே காரணம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. டெல்லி அரசு, நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதுடன், ஒரு வாரத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டுள்ளது. தொழிற்சாலை உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கு குற்ற பிரிவுக்கு மாற்றப்பட்டது. தீ விபத்து நடந்த கட்டிட உரிமையாளர் ரேஹான் கைது செய்யப்பட்டு உள்ளார்.

கட்டிடத்தில் தீ பாதுகாப்பு உபகரணம் எதுவும் இல்லை. தீப்பிடிக்க கூடிய பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தன என டெல்லி தீயணைப்பு துறை இயக்குனர் அதுல் கார்க் கூறியுள்ளார்.

இந்த சூழலில், நேற்று தீ விபத்து ஏற்பட்ட அதே கட்டிடத்தில் இன்று மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், தீ விபத்து நடந்தவுடன் அந்த பகுதிக்கு சென்று, கட்சி சார்பிலான நிதியுதவி அறிவிப்பினை வெளியிட்ட பா.ஜ.க. தலைவர் மனோஜ் திவாரி, டெல்லி தீ விபத்து நடந்த தளத்தின் உரிமையாளர் ரேஹான், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த தொண்டராவார் என கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com