டெல்லி வன்முறையில் பலி; தலைமை காவலர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு: கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லி வன்முறையில் பலியான தலைமை காவலர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என கெஜ்ரிவால் அறிவித்து உள்ளார்.
டெல்லி வன்முறையில் பலி; தலைமை காவலர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு: கெஜ்ரிவால் அறிவிப்பு
Published on

புதுடெல்லி,

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தலைநகர் டெல்லியில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், டெல்லியில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன. இது வன்முறையாக மாறியது.

இதனால் டெல்லியில் கடந்த மூன்று தினங்களாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. டெல்லி வன்முறையில் பலியானவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. 200க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் ஜி.டி.பி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலர் வீடு திரும்பி விட்டனர். வன்முறையை கட்டுப்படுத்த வடகிழக்கு டெல்லியில் 10 இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வன்முறையில் டெல்லி காவல் துறை தலைமை காவலர் ரத்தன் லால் (வயது 42) பலியானார். முதலில் கல்வீச்சில் அவர் பலியானார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், அவரது உடலில் துப்பாக்கி குண்டு காயங்கள் இருந்தன. கடந்த 1998ம் ஆண்டு டெல்லி காவல் துறையில் சேர்ந்த அவருக்கு பூனம் என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர்.

டெல்லி வன்முறையில் பலியான டெல்லி காவல் துறை தலைமை காவலர் ரத்தன் லாலின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com