

ஜெய்பூர்,
ராஜஸ்தானில் அதிதீவிர புழுதி புயல் மற்றும் அதனை தொடர்ந்து பெய்த கனமழையால் பல இடங்களில் வீடுகள் இடிந்தன. மின்கம்பங்கள் சாய்ந்தன. மரங்கள் வேரோடு சரிந்து விழுந்தன.
இதுபற்றி பேரிடர் மேலாண்மை மற்றும் நிவாரண செயலாளர் ஹேமந்த் குமார் கெரா செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, இதுவரை பரத்பூர் பகுதியில் 12 பேர், தோல்பூர் பகுதியில் 10 பேர் மற்றும் ஆல்வார் பகுதியில் 5 பேர் என மொத்தம் 27 பேர் பலியாகி உள்ளனர். இந்த புழுதி புயல் முக்கியம் ஆக 3 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
தோல்பூரில் பலியானவர்களில் 2 பேர் உத்தர பிரதேசத்தின் ஆக்ரா நகரை சேர்ந்தவர்கள்.
இதனால் 100 பேர் வரை காயமடைந்து உள்ளனர். அவர்களில் 20 பேர் ஆல்வார், 32 பேர் பரத்பூர் மற்றும் 50 பேர் தோல்பூர் பகுதியை சேர்ந்தவர்கள்.
இதனை தொடர்ந்து நிவாரண மற்றும் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. முதல் மந்திரி வசுந்தரா ராஜே உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து உள்ளார்.
பலியானோருக்கு ரூ.4 லட்சமும், 60 சதவீத காயமடைந்தோருக்கு ரூ.2 லட்சமும் மற்றும் 40 முதல் 50 சதவீத காயமடைந்தோருக்கு ரூ.60 ஆயிரமும் வழங்கப்படும் என்றும் கெரா கூறியுள்ளார்.