

புதுடெல்லி,
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ளார். நிரவ் மோடியை இந்தியா கொண்டு வருவதற்கான பணிகளை இங்குள்ள விசாரணை முகமைகள் மேற்கொண்டுள்ளன.
பஞ்சாப் நேஷனல் வங்கி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள சிபிஐ, வங்கி அதிகாரிகள் உட்பட, இந்த மோசடியில் தொடர்புடை பலரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. நிரவ் மோடிக்கு சொந்தமான ரோல்ஸ் ராய்ஸ், போர்சே உள்ளிட்ட 9 கார்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது.
இந்த நிலையில், நிரவ் மோடிக்கு சொந்தமான இடங்களில் தொடர் சோதனை மேற்கொண்டு வரும் அமலாக்கத்துறை அதிகாரிகள், நிரவ் மோடி நிறுவனங்களின் வங்கி வைப்புத்தொகைகள், பங்குச்சந்தை முதலீடுகள் ஆகியவற்றை முடக்கியுள்ளனர். இவற்றின் மதிப்பு ரூ.44 கோடியாக இருக்கும் என்று ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.
இதுபோல் நிரவ் மோடி நிறுவனத்தில் இருந்து ஏராளமான விலை உயர்ந்த கைக்கடிகாரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அவை பல்வேறு பெட்டிகளில் வைக்கப்பட்டு இருந்தன. 176 இரும்பு பீரோ, 158 பெட்டிகள், 60 கண்டெய்னர்கள் ஆகியவற்றிலும் ஏராளமான விலை உயர்ந்த பொருட்கள் இருந்தன. அவற்றையும் கைப்பற்றி இருக்கிறார்கள். #NiravModi #PNBscam