பிஜி நாட்டு பிரதமர் இந்தியா வருகை; பிரதமர் மோடியுடன் இன்று சந்திப்பு

ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த ஆண்டு பிஜி நாட்டுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.
புதுடெல்லி,
தெற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடான பிஜியில் பிரதமராக இருப்பவர், சிதிவேனி லிகமமடா ரபுகா. இவர் முதல் முறையாக இந்தியாவில் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். உயர்மட்டக்குழு ஒன்றுடன் 3 நாள் பயணமாக இந்தியா வந்த அவரை டெல்லி விமான நிலையத்தில் மத்திய மந்திரி சுகந்தா மஜும்தார் வரவேற்றார். டெல்லியில் இன்று (திங்கட்கிழமை) அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். அப்போது இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்துவர். மேலும் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிப்பது குறித்தும் அவர்கள் விவாதிக்க உள்ளனர்.
பின்னர் சிதிவேனி லிகமமடா ரபுகா மற்றும் அவருடன் வந்த குழுவினருக்கு பிரதமர் மோடி மதிய விருந்து அளிக்கிறார். கடல்சார் பாதுகாப்பில் இந்தியாவுக்கு முக்கியமான நாடாக பிஜி உள்ளது. மேலும் இரு நாடுகளுக்கு இடையே ஒரு வலுவான மற்றும் மக்களுக்கு இடையேயான உறவுகளும் உள்ளன. கடந்த 1879-ம் ஆண்டு முதலே பிஜியுடனான இந்தியாவின் தொடர்புகள் தொடங்கி உள்ளது. அப்போது இந்திய தொழிலாளர்கள் ஆங்கிலேயர்களால் ஒப்பந்த முறையில் பிஜிக்கு அழைத்து செல்லப்பட்டனர். பிஜி பிரதமர் ரபுகாவின் வருகை இந்தியா-பிஜி இடையேயான நீண்டகால மற்றும் நீடித்த உறவுகளை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் கடந்த வாரம் கூறியிருந்தது. மேலும் ரபுகாவின் இந்த பயணம் பல்வேறு துறைகளில் இரு நாட்டு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டு உள்ளார். முன்னதாக ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த ஆண்டு பிஜி நாட்டுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். அதைத்தொடர்ந்து பிஜி பிரதமரின் இந்திய பயணம் நடைபெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.






