

கொச்சி,
கேரளாவை ஒட்டிய அரபிக்கடல் பகுதியில் சுவர்ணா என்ற இந்திய கடற்படை கப்பல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தது. அப்போது, சந்தேகத்துக்கிடமான முறையில் சுற்றிக் கொண்டிருந்த ஒரு மீன்படி படகை கடற்படை வீரர்கள் தடுத்து நிறுத்தினர். படகில் ஏறி சோதனையில் ஈடுபட்டனர்.
இதில், 300 கிலோவுக்கு மேல் போதைப்பொருள் இருந்தது. சர்வதேச சந்தையில் அதன் மதிப்பு சுமார் ரூ.3 ஆயிரம் கோடி இருக்கும். அந்த படகு இலங்கையை சேர்ந்தது. ஆனால், பாகிஸ்தானில் இருந்து போதைப்பொருளை கடத்தி வந்தது. படகில் இருந்த இலங்கையை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
படகுடன் 5 பேரும் நேற்று காலை கொச்சிக்கு கொண்டு வரப்பட்டனர். அங்கு அவர்களிடம் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு, தென்பிராந்திய கடற்படை ஆகியவற்றை சேர்ந்த அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதன்மூலம், சர்வதேச கடத்தல் கும்பலின் திட்டம் முறியடிக்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.