முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு; நடிகர்கள் ரஜினிகாந்த், தனுஷ் இரங்கல்

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஒரு சிறந்த மரியாதைக்குரிய அரசியல் தலைவர் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு; நடிகர்கள் ரஜினிகாந்த், தனுஷ் இரங்கல்
Published on

முன்னாள் பிரதமர் மற்றும் பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான அடல் பிஹாரி வாஜ்பாய் (வயது 93) உடல்நல குறைவால் எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று மாலை 5.05 மணிக்கு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்து விட்டார்.

அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், அவரது மறைவுக்கு பல்வேறு திரை பிரபலங்களும் தங்களது இரங்கலை தெரிவித்து உள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஒரு சிறந்த மரியாதைக்குரிய அரசியல் தலைவர் என கூறியுள்ளார். ஸ்ரீ வாஜ்பாய் ஜி மறைந்து விட்டார் என்ற செய்தியை அறிந்து வருத்தமுற்றேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என கூறியுள்ளார்.

இதேபோன்று லதா மங்கேஷ்கர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், ஒரு முனிவர் போன்ற முன்னாள் பிரதமர், பாரத ரத்னா, வாஜ்பாய் ஜி மறைந்த செய்தி என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவர் எனக்கு தந்தை போன்றவர். அவரது மறைவு வருத்தத்தினை தருகிறது என தெரிவித்துள்ளார்.

நடிகர் சஞ்சய் தத், வாஜ்பாய் மறைவு நாட்டிற்கு பேரிழப்பு என கூறியுள்ளார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு நடிகர் தனுஷ் டுவிட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய்ஜி மறைந்து விட்டார் என்ற செய்தி அறிந்து ஆழ்ந்த வருத்தமடைந்தேன். அந்த சிறந்த மனிதரின் குடும்பத்திற்கும் மற்றும் அவரது அன்பிற்கு உரியவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள் என தெரிவித்து உள்ளார்.

இதேபோன்று வாஜ்பாய் மறைவுக்கு பாகுபலி இயக்குநர் ராஜமவுலி, இந்தி நடிகர் சித்தார்த், நடிகை பிரியங்கா சோப்ரா உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com