

ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே கல்லூரி மாணவி ஒருவர் 4 பேர் கொண்ட கும்பலால் தாக்கப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானாவில் தனியார் கல்லூரியில் பி பார்ம் 2ம் ஆண்டு படித்து வரும் மாணவி பகுதி நேரமாக அங்குள்ள மெடிக்கல் ஷாப்பில் வேலை பார்த்து வந்துள்ளார். தினசரி அங்கிருந்து அவரது ஊருக்கு ஆட்டோவில் செல்வது வழக்கம். அதன்படி நேற்று மாலை பணி முடிந்து கொம்பள்ளி பகுதியில் ஏழு இருக்கைகள் கொண்ட ஆட்டோவில் ஏறி உள்ளார். ஆட்டோ ஆரம்பத்தில் மூன்று பயணிகள் இருந்து உள்ளனர். ஆனால் அவர் ஆர்.எல்.ஆர் நகரில் தனது நிறுத்தத்தில் இறங்க வேண்டிய நேரத்தில், மாலை 6.30 மணியளவில், அவர் ஆட்டோவில் தனியாக இருந்தார்.ஆட்டோவானது திடீரென திசை மாறி சென்றுள்ளது. இதுகுறித்து தனது தாயாருக்கு மாணவி தகவல் தெரிவித்திருக்கிறார்.
இதற்கிடையில், ஆட்டோ டிரைவர் யம்னம்பேட்டை கிராமத்திற்கு ஓட்டிச் சென்றார், அங்கு மற்றொரு வேன் காத்திருந்தது. ஆட்டோ டிரைவரும் வேன் டிரைவரும் மாணவியை பிடித்து வேனில் ஏற்றி உள்ளனர்.
இதன் அடிப்படையில் பெற்றோர் கீசரா போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். மாணவியின் தொலைபேசி சிக்னலை வைத்து காவல்துறையினர் தேடுதல் வேட்டை நடத்தியபோது நெடுஞ்சாலையில் இருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்திற்குள் மாணவி நிர்வாணமாக தலையில் காயங்களுடன் கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் தாக்குதலுக்குள்ளான மாணவியை உடனடியாக மீட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், மாணவி 4பேர் கொண்ட கும்பலால் தாக்கப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது கண்டுபிடிக்கப்பட்டது. மாணவி அளித்த தகவலின்அடிப்படையில் 4 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.