தடுப்பூசி கொள்கை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

தடுப்பூசி கொள்கை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் ராஜீவ் சுக்லா, கூறியதாவது:-

கிராமப்புறங்களில் கொரோனா பரவுவது குறித்து மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும். அங்கு பரிசோதனை வசதிகள், படுக்கை வசதிகள், மருத்துவர்கள், மருத்துவ கட்டமைப்புகள் போதுமானதாக இல்லை. மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட வேண்டும். கிராமப்புறங்களுக்கும் மருத்துவ வசதிகளும், தடுப்பூசியும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

தடுப்பூசி கொள்கை பற்றி அனைவரும் அறியும் வண்ணம் மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைக்கிறோம். எவ்வளவு தடுப்பூசிகள் வாங்கப்பட்டுள்ளது, எவ்வளவு பேருக்கு தடுப்பூசி போட தீர்மானிக்கப்பட்டுள்ளது என்பதை வெளியிடுங்கள். இது உங்களின் கவுரவ பிம்பத்தை கட்டமைக்கும் நேரமல்ல. உங்கள் ஆற்றல் முழுவதையும் கொரோனாவில் இருந்து வெளிவர மக்களுக்கு உதவுவதற்காக செலவிடுங்கள்.

கொரோனா தொற்று ஏற்படுவோர் எண்ணிக்கை குறையத் தொடங்கினாலும், இறப்பவர்களின் எண்ணிக்கை குறையவில்லை. இது மிகப்பெரிய சவாலாக உள்ளது. தினமும் 90 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டால்தான் கொரோனா பரவல் சங்கிலி உடையும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனால் தற்போது தடுப்பூசி போடும் வேகம் அதற்கு மிகவும் குறைவாக உள்ளது. கொரோனா பரவல் சங்கிலியை உடைக்காவிட்டால், 3-வது அலை ஏற்படுவதை தடுக்க முடியாது. எனவே போர்க்கால அடிப்படையில் தடுப்பூசிகளை வாங்க மாநில அரசுகளுடன் பேச்சு வார்த்தை நடத்த கேட்டுக்கொள்கிறேன்என்று அவர் கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com