பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை 4 சதவீதம் குறைத்தது குஜராத் மாநில அரசு

மத்திய அரசு கேட்டுக்கொண்டதையடுத்து பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குஜராத் மாநில அரசு 4 சதவீதம் குறைத்துள்ளது.
பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை 4 சதவீதம் குறைத்தது குஜராத் மாநில அரசு
Published on

அகமதாபாத்,

சரக்கு சேவை வரி (ஜி.எஸ்.டி.) விதிப்பு முறை நடைமுறைக்கு வருவதற்கு முன்பாக, அதாவது கடந்த ஜூலை மாதம் 31-ந்தேதிக்கு முன்பு பெட்ரோல், டீசல் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவற்றின் மீது மத்திய அரசும், மாநில அரசுகளும் 10-க்கும் மேலான வரிகளை விதித்து வந்தன. இறுதியில் மதிப்பு கூட்டு வரி என்னும் வாட் வரியும் விதிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.

ஜி.எஸ்.டி. நடைமுறைக்கு வந்த பிறகு பெட்ரோலிய பொருட்களுக்கு இதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது. என்றபோதிலும் பல மாநிலங்களில் இவற்றின் மீது விதிக்கும் வாட் வரியை குறைக்கவில்லை.ஒரு சில மாநிலங்கள் மட்டும் இயற்கை எரிவாயு மற்றும் டீசல் மீதான வாட் வரியை சற்று குறைத்தன. அதேநேரம் பல மாநிலங்களில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி 17 சதவீதம் முதல் 31 சதவீதமாக உள்ளது.இதைத்தொடர்ந்து மத்திய நிதி மந்திரி, மாநில முதல்-மந்திரிகள் அனைவருக்கும் ஒரு கடிதம் எழுதினார். அதில், மாநில அரசுகள் வாட் வரியை குறைக்க வேண்டும் என்று மாநில அரசுகளை கேட்டுக்கொண்டார்.

இந்த நிலையில், இதை ஏற்று குஜராத் அரசு பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை 4 சதவீதம் குறைத்து நடவடிக்கை எடுத்துள்ளது. 5 சதவீதம் வரை வாட் வரியை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டதையடுத்து வாட் வரியை முதல் மாநிலமாக குஜராத் அரசு குறைத்துள்ளது. வாட் வரி குறைக்கப்பட்டதால், குஜராத்தில் பெட்ரோல் விலை ரூ.2.93-ம், டீசல் விலை ரூ. 2.72-ம் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com