

பெங்களூரு,
சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்க ரூ.2 கோடியை அப்போதைய சிறைத்துறை டி.ஜி.பி. சத்தியநாராயணராவ் லஞ்சமாக பெற்றதாக புகார் எழுந்தது.
இதுகுறித்து ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் உயர்மட்ட குழு விசாரணை நடத்தி அறிக்கையை மாநில அரசிடம் தாக்கல் செய்தது. இதன் பேரில் முன்னாள் டி.ஜி.பி. சத்தியநாராயணராவ் மீது ஊழல் தடுப்பு படையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சத்தியநாராயணராவ் கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில், கர்நாடக முதல்மந்திரி சித்தராமையா என்னை அழைத்து, சசிகலாவுக்கு கட்டில், மெத்தை, தலையணை உள்ளிட்ட சலுகைகள் வழங்க அறிவுறுத்தினார். இதற்கு ஒப்புக்கொண்டு அவருக்கு அந்த வசதிகள் செய்து கொடுத்தேன். இதை தான் நான் செய்தேன். வேறு எதையும் நான் செய்யவில்லை என்று தெரிவித்து இருந்தார்.
கர்நாடக முன்னாள் டிஜிப் சத்திய நாராயணராவின் இந்த கருத்து கர்நாடக அரசியலில் பெரும் விவாதப்பொருளானது. இதையடுத்து, நேற்று பேட்டி அளித்த சித்தராமையா, சசிகலாவுக்கு விதிமுறைகளை மீறி சிறப்பு வசதிகளை செய்து கொடுக்கும்படி சத்தியநாராயணராவுக்கு நான் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. சொகுசு வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று நான் கூறியதாக அவர் தெரிவித்து உள்ளார். இது முற்றிலும் தவறானதுஎன தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- சிறை விதிகளின் படி சசிகலாவுக்கு சலுகை அளிக்குமாறு சிறை டிஜியிடம் கேட்டுக்கொண்டேன். ஆனால், சிறை விதியை மீறி டிஜி செயல்பட்டிருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து உள்ளார்.