

அமேதி,
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக தன்னுடைய தொகுதியான அமேதிக்கு சென்றுள்ளார். அங்கு பிரசார கூட்டத்தில் பேசி வருகிறார். பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்து பேசுகையில், ரபேல் மற்றும் விவசாயிகள் பிரச்சனையை குறிப்பிட்டார்.
பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்ததும் 126 விமானங்களை வாங்க மாட்டோம் என்றார். மாறாக விமானத்தின் விலையை ரூ. 526 கோடியிலிருந்து ரூ. 1,600 கோடியாக உயர்த்தினார். இது பிரான்ஸ் அதிபர் கூறியது என்று குற்றம் சாட்டினார் ராகுல் காந்தி.
வளர்ச்சி எங்கே?
இந்தியாவில் வளர்ச்சி வரும் என்று பிரதமர் மோடி கூறினார். இப்போது வந்து விட்டதா? எங்கே வளர்ச்சி? என இளைஞர்களிடம் கேள்வியை எழுப்பினார் ராகுல் காந்தி.
விவசாயிகள் பாதிப்பு
விவசாயிகள் நாட்டிற்காக அனைத்தையும் கொடுக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு விவசாய கடனை பிரதமர் மோடி தள்ளுபடி செய்யவில்லை. மறுபுறம் 15 தொழில் நிறுவனங்களுக்கு ரூ. 3.5 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளார். பாதுகாவலர் எப்படி நான்கரை ஆண்டுகளில் திருடராகியுள்ளார் என்பதை பாருங்கள் என கடுமையாக தாக்கினார்.
சிபிஐ கூண்டுக்கிளியானது
ரபேல் விமான ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரிக்க முற்பட்ட போது அதன் இயக்குநர் இரவு 1:30 மணியளவில் நீக்கப்பட்டார். இதுதவறானது என்று உச்சநீதிமன்றம் மீண்டும் அவரை பணியில் அமர்த்தியது. ஆனால் இரண்டு மணி நேரங்களில் அவர் மீண்டும் அகற்றப்பட்டார். மோடியின் ஆட்சியில் சிபிஐ கூண்டுக்கிளியாகியுள்ளது என்றார் ராகுல் காந்தி.
பொய் சொல்ல மாட்டேன்
நாங்கள் விவசாயக்கடன் தள்ளுபடி செய்வோம் என்றோம், அதன்படி செய்தோம். பிரதமர் மோடியை போன்று நான் பொய் சொல்ல மாட்டேன். அமேதியில் உணவு பூங்கா அமைக்கப்படும் என்று வாக்குறுதியளித்தேன். அதனை பிரதமர் மோடி நிறுத்தி விட்டார். ஆனால் அதனை கண்டிப்பாக கட்டுவேன் என உங்களுக்கு உறுதியளிக்கிறேன் என்றார் ராகுல் காந்தி. தொடர்ந்து மத்திய அரசையும், பா.ஜனதாவையும் விமர்சனம் செய்தார்.