

புதுடெல்லி,
ஐ.ஜி. முருகன் மீதான பாலியல் வழக்கு விசாரணையை தெலுங்கானா மாநிலத்துக்கு மாற்றிய ஐகோர்ட்டு உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது.
லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி. யாக பணியாற்றிய டாக்டர் எஸ்.முருகன் தன்னை பாலியல் ரீதியாக தொல்லை செய்ததாக கடந்த ஆண்டு பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் கொடுத்த புகாரின் மீது விசாரணை நடத்த பெண் டி.ஜி.பி. தலைமையில் விசாகா கமிட்டி அமைக்கப்பட்டது. ஐ.ஜி. முருகன் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் வழக்குப்பதிவு செய்தனர்.
இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஐ.ஜி. முருகன் வழக்கு தொடர்ந்தார். புகார் செய்த பெண் போலீஸ் அதிகாரியும் ஐ.ஜி. முருகனை முக்கியத்துவம் இல்லாத வேறுபிரிவுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்று தனியாக வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி, ஐ.ஜி. முருகன் மீதான புகார் குறித்து டி.ஜி.பி. ஸ்ரீலஷ்மி பிரசாத் தலைமையிலான விசாகா கமிட்டி தனது விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேர்மையாக விசாரணை நடத்தி சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து ஐ.ஜி. முருகன் மேல்முறையீடு செய்தார்.
இதேபோல, இந்த வழக்கு தமிழகத்தில் நடந்தால் தனக்கு நியாயம் கிடைக்காது என்றும், இந்த விசாரணையை கேரளா அல்லது டெல்லிக்கு மாற்ற வேண்டும் என்றும் அந்த பெண் போலீஸ் அதிகாரியும் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சி.வி.கார்த்திகேயன் ஆகியோர், ஐ.ஜி. முருகன் மீதான விசாரணையை தெலுங்கானா மாநிலத்துக்கு மாற்றி உத்தரவிட்டனர்.
மேலும், சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திவரும் விசாரணை மற்றும் விசாகா கமிட்டி நடத்தும் விசாரணை ஆகியவற்றை தனித்தனியாக விசாரிக்க தெலுங்கானா மாநில தலைமைச் செயலாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண் அதிகாரி தலைமையில் விசாகா கமிட்டி விசாரணையை தெலுங்கானா டி.ஜி.பி. நடத்த வேண்டும். விசாகா கமிட்டி 6 மாதத்துக்குள் கோர்ட்டுக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கடந்த ஆகஸ்டு 28-ந் தேதி உத்தரவு பிறப்பித்தனர்.
சென்னை ஐகோர்ட்டின் இந்த உத்தரவை ரத்துசெய்யக்கோரி ஐ.ஜி. முருகன் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவின் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் இந்து மல்கோத்ரா, சுபாஷ் ரெட்டி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பாலாஜி சீனிவாசன், அரசு வக்கீல் யோகேஷ் கன்னா ஆகியோர் ஆஜரானார்கள்.
விசாரணை தொடங்கியதும், இந்த வழக்கை தெலுங்கானா ஐகோர்ட்டுக்கு மாற்றிய சென்னை ஐகோர்ட்டின் உத்தரவுக்கு தடை விதித்த நீதிபதிகள், பாலியல் புகார் குறித்த விவரங்களை தாக்கல் செய்யுமாறு பெண் போலீஸ் அதிகாரிக்கும், தமிழக அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.