

அமிர்தசரஸ் அருகே ஜோதா பதக் என்ற இடத்தில் அக்டேபர் மாதம் தசரா கொண்டாட்ட நிகழ்ச்சி ரெயில் தண்டவாளத்துக்கு அருகே உள்ள மைதானத்தில் நடந்தது. வழக்கம்போல், அங்கு ராவணன் உருவ பொம்மை எரிப்பு நிகழ்ச்சி நடந்தது. அப்போது பட்டாசுகள் வெடித்த போது, தண்டவாளத்தில் நின்றவர்கள் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் ரெயில் ஏறிச்சென்றது. இதில் 61 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். ரெயில்வே தண்டவாளம் பகுதி அனுமதியளிக்கப்படாத பகுதியாகும். ரெயில்வே நிர்வாகத்திடம் அனுமதி கேட்கப்படவில்லை என ரெயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே விபத்து தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணைக்கு மாநில முதல்-அமைச்சர் அம்ரிந்தர்சிங் உத்தரவிட்டார். அந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விபத்துதொடர்பாக கைது செய்யப்பட்ட ரெயில் ஓட்டுநர் எனக்கு கிரீன் சிக்னல்தான் கொடுக்கப்பட்டது, என தெரிவித்தார்.
இந்நிலையில் அனுமதியின்றி மக்கள் ரெயில்வே தண்டவாளத்தில் குவிந்ததும், அவர்களது அலட்சியமுமே இந்த விபத்துக்கு காரணம் என்று ரெயில்வே பாதுகாப்பு அமைப்பின் தலைமை ஆணையர் விசாரணையில் வெளிவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விழாவின் போது தண்டவாளத்தில் இருந்த கூட்டத்தை போலீசார் கலைக்க முயற்சித்துள்ளனர். ஆனால் அவர்களுடைய கோரிக்கையை கூட்டத்தில் இருந்தவர்கள் கண்டுக்கொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரெயில்வே அப்பகுதியில் பாதையில் அனுமதிக்கப்பட்ட வேகம் மணிக்கு 100 கிலோ மீட்டர், விபத்து ஏற்படும் நேரத்தில் மணிக்கு 82 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயில் சென்றுள்ளது. தண்டவாளம் பகுதியில் கூட்டத்தை கண்ட ரெயில் ஓட்டுநர் அவசர கால பிரேக்கை பிடித்துள்ளார். ரெயில் சென்றுகொண்டிருந்த அந்த வேகத்தில் பிரேக் பிடித்தால் ரெயில் நிற்பதற்கான பொதுவான தூரம் 389 மீட்டர் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழா ஏற்பாடு தொடர்பாக ரெயில்வே நிர்வாகத்துக்கு தகவல் அளிக்கவில்லை என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரெயில்வே ஊழியர்கள், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானவர்களிடம் இருந்து வாக்குமூலங்களை சேகரித்து ரெயில்வே பாதுகாப்பு அமைப்பின் தலைமை ஆணையர் அறிக்கையை தாக்கல் செய்துள்ளார்.