தீபாவளியை முன்னிட்டு அயோத்தியில் 5½ லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டன கின்னஸ் சாதனை முயற்சி

தீபாவளியை முன்னிட்டு அயோத்தியில் சிறப்பு விழா கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக நகர் முழுவதும் 5½ லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டன. இது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தீபாவளியை முன்னிட்டு அயோத்தியில் 5½ லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டன கின்னஸ் சாதனை முயற்சி
Published on

அயோத்தி,

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உத்தரபிரதேச மாநில அரசு சார்பில் அயோத்தியில் நேற்று சிறப்பு விழா (தீபோத்சவ்) கொண்டாடப்பட்டது. ராமபிரான் வனவாசம் சென்று திரும்பியதை நினைவுகூரும் வகையில் நடந்த இந்த சிறப்பு விழாவில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், கவர்னர் ஆனந்தி பென் படேல், பிஜி தீவுகளின் துணை சபாநாயகர் வீணா பட்நாகர் மற்றும் மாநில மந்திரிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

இந்த விழாவில் ராமபிரான் தொடர்பான நிகழ்வுகளை பிரதிபலிக்கும் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு காலையில் நடந்தது. சகேத் கல்லூரியில் இருந்து ராம்கதா பூங்கா வரை நடந்த இந்த ஊர்வலத்தில் பல்வேறு நாடுகளில் இருந்து வந்திருந்த ஏராளமான கலைஞர்கள் பங்கேற்றனர். மேலும் 2,500-க்கும் மேற்பட்ட சிறுவர்-சிறுமிகளும் ராமபிரானின் வாழ்க்கை நிகழ்வுகளை பிரதிபலிக்கும் பொருட்களுடன் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

பின்னர் மாலையில் ராமபிரான், சீதையுடன் ஹெலிகாப்டர் ஒன்றில் வந்து இறங்குவது போல சிறப்பு காட்சிகள் அரங்கேற்றப்பட்டன. பின்னர் அவருக்கு முடிசூட்டும் அடையாள நிகழ்வு, சிறப்பு வழிபாடு என பல்வேறு நிகழ்வுகள் நடந்தன. இந்த விழாவில் ரூ.226 கோடிக்கான திட்டங்களும் அறிவிக்கப்பட்டன.

பின்னர் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அயோத்தி நகர் மற்றும் அங்குள்ள சரயு நதிக்கரையில் சாதனை முயற்சியாக 5.51 லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டன. இதில் ஏராளமான தன்னார்வ தொண்டர்கள் கலந்து கொண்டு அகல் விளக்குகளை ஏற்றினர். இதனால் நகர் முழுவதும் ஒளிவெள்ளத்தில் மிதந்தது. இது ஒரு புதிய சாதனையாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com