

ஐதராபாத்,
மத்திய பட்ஜெட் விவகாரத்தில் கசப்புணர்வு நீடித்தாலும் பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி தொடரும் என தெலுங்கு தேசம் தெரிவித்து இருந்தது. பாரதீய ஜனதா மற்றும் ஆந்திர பிரதேச முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு இடையிலான விரிசல் அதிகரித்து செல்கிறது.
மத்தியில் உள்ள பாரதீய ஜனதா தலைமையிலான மோடி அரசின் மீது சந்திரபாபு நாயுடு விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.
இவ்வரிசையில் அவருடைய குரலுக்கு வலுசேர்க்கும் வகையில் மற்றொரு தெலுங்கு மாநிலமான தெலுங்கானாவின் முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் விமர்சனத்தை முன்வைத்து உள்ளார்.
தேசிய குற்ற ஆவண காப்பக (என்சிஆர்பி) தகவலின்படி தேசத்தில் விவசாயிகள் அதிகமாக தற்கொலை செய்துக்கொள்ளும் மாநிலங்கள் பட்டியலில் தெலுங்கானா இரண்டாவது இடம் பிடிக்கிறது. தெலுங்கானா விவசாயிகள் விவகாரத்தில் மத்திய அரசு வேறுபாடு காட்டுகிறது என சாடிஉள்ள தெலுங்கானா மாநில முதல்-மந்திரி சந்திரசேகர ராவ், விவசாயிகள் பிரச்சனைகள் தொடர்பாக பிரதமர் மோடியிடம் 20 முறை பேசிஉள்ளேன், ஆனால் இதுவரையில் ஒரு பதில் கூட கிடைக்கவில்லை, என சாடிஉள்ளார். தெலுங்கானாவில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த அறிக்கையானது வெளியாகி உள்ளது.
அரசு உத்தரவாதங்கள் தொடர்பான மாநிலங்களவை குழுவிடம் மாநில அரசு தாக்கல் செய்த அறிக்கையில், தெலுங்கானாவில் இரண்டு ஆண்டுகளில் 1,990 விவசாயிகள் உயிரிழந்து உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
விவசாயிகள் படிப்படியாக தங்களுடைய நம்பிக்கை மற்றும் அமைதியை இழந்து வருகிறார்கள். இதுபோன்ற சூழ்நிலையானது விவசாயிகளின் போராட்டத்திற்கு வழிவகை செய்யும், என காரீம்நகரில் பேசிய சந்திரசேகர ராவ் கூறிஉள்ளார். விவசாயிகள் விவகாரத்தில் மத்திய அரசின் தோல்வியை பட்டியலிட்டு பேசிய சந்திரசேகர ராவ், முதன்மை முயற்சியாக விவசாயிகளுக்கான ஆயுள் காப்பீட்டை அறிவித்து உள்ளார். விவசாயிகள் விபத்து அல்லது உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தால் ரூ. 5 லட்சம் வழங்கப்படும். இந்த திட்டம் மூலம் மாநிலத்தில் 70 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.