

புதுடெல்லி,
சத்தீஷ்கார் மாநிலம் பிலாய் நகரில் உள்ள மத்திய அரசின் செயில் நிறுவனத்துக்கு சொந்தமான இரும்பாலையில் நேற்று ஏற்பட்ட வெடி விபத்தில் 12 பேர் பலி ஆனார்கள். மேலும் பலர் காயம் அடைந்தனர்.
இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.30 லட்சமும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.15 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும் வழங்கப்படும் என்று மத்திய உருக்கு துறை மந்திரி சவுத்ரி பிரேந்திர சிங் அறிக்கை ஒன்றில் தெரிவித்து உள்ளார். மேலும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.33 லட்சம் முதல் ரூ.90 லட்சம் வரை சட்ட ரீதியிலான இழப்பீடு கிடைக்கும் என்றும் அதில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.
இந்நிலையில் இன்று பிலாய் சென்ற சவுத்ரி பிரேந்திர சிங், வெடிவிபத்தில் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை பார்த்து ஆறுதல் கூறினார். வெடி விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கவும், அவர்களுடைய குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கவும் செயில் நிறுவனத்துக்கு அவர் உத்தரவிட்டு இருக்கிறார்.