மராட்டிய துணை முதல்-மந்திரி அஜித்பவார் நிறுவனங்களில் வருமான வரி அதிகாரிகள் சோதனை

துணை முதல்-மந்திரி அஜித்பவார் மற்றும் அவரது குடும்பத்தினரின் நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
மராட்டிய துணை முதல்-மந்திரி அஜித்பவார் நிறுவனங்களில் வருமான வரி அதிகாரிகள் சோதனை
Published on

மராட்டிய துணை முதல்-மந்திரி அஜித்பவார் மற்றும் அவரது குடும்பத்தினர் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகின்றனர்.

சர்க்கரை ஆலை

தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரான அஜித்பவார் மற்றும் அவரது குடும்பத்தினர் சத்தாராவில் உள்ள ஜரந்தேஷ்வர் கூட்டுறவு சர்க்கரை ஆலையை யும் நடத்தி வருகின்றனர். இந்த கூட்டுறவு சர்க்கரை ஆலை சட்டவிரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்டது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.

இதையடுத்து அந்த ஆலைக்கு சொந்தமான நிலம், கட்டிடம், எந்திரங்கள் என ரூ.65 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை கடந்த ஜூலை மாதம் முடக்கியது.

வருமான வரி சோதனை

இந்த ஆலை மற்றும் அஜித்பவாரின் குடும்பத்தினர் நடத்தி வரும் மற்ற நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக வருமான வரித்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் குறிப்பிட்ட நிறுவனங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் அஜித்பவாரின் 3 சகோதரிகள் நடத்தி வரும் நிறுவனங்களும் அடங்கும்.

இதுதவிர சில ரியல் எஸ்டேட் நிறுவனங்களிலும் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனை மும்பை, புனே, சத்தாரா, கோலாப்பூர் உள்ளிட்ட மராட்டிய நகரங்களிலும், கோவாவிலும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டது.

இதில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், அவற்றை ஆய்வு செய்யும் பணி நடந்து வருவதாகவும் வருமான வரி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அஜித்பவார் பேட்டி

இதுபற்றி துணை முதல்-மந்திரி அஜித்பவார் நிருபர்களிடம் கூறியதாவது:-

நான் நிதி மந்திரியாகவும் உள்ளேன். எனவே நிதி ஒழுங்குமுறை பற்றி எனக்கு நன்றாக தெரியும். எனக்கு தொடர்புடைய நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் வரி செலுத்தி வருகிறேன். அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக எனது நிறுவனங்களில் சோதனை நடத்துவதை பற்றி நான் கவலைப்படவில்லை. ஆனால் எனது சகோதரிகள் நிறுவனங்களில் தேவையில்லாமல் சோதனை நடத்துவது வருத்தமளிக்கிறது. மத்திய விசாரணை அமைப்புகள் தவறாக வழிநடத்தப்படுகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

சரத்பவார் கருத்து

அஜித்பவார் தொடர்புடைய நிறுவனங்களில் நடத்திய வருமான வரி சோதனை குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

உத்தரபிரதேச மாநிலம் லகிம்பூரில் நடந்த வன்முறையில் விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவத்தை நான் கடுமையாக கண்டித்தேன். இதனை ஜாலியன் வாலாபாக் படுகொலையுடன் ஒப்பிட்டேன். மராட்டிய அரசும் தீவிரமாக கண்டித்தது. மந்திரி சபையில் கொல்லப்பட்ட விவசாயிகளுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இதன் காரணமாக தான் மத்திய அரசு வருமான வரித்துறையை ஏவி விட்டு அஜித்பவாரின் குடும்பத்தினர் நிறுவனங்களில் சோதனை நடத்தி உள்ளது. மத்திய அரசு அதிகப்படியான அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com