தமிழகம் உள்பட நாடு முழுவதும் கோவில்கள், ரெயில் நிலையங்களை தகர்க்க பாக். பயங்கரவாதிகள் சதி - மிரட்டல் கடிதத்தால் பலத்த பாதுகாப்பு

சென்னை மும்பை உள்பட நாட்டின் முக்கிய ரெயில் நிலையங்களில் தாக்குதல் நடத்தப்படும் என கடிதம் மூலமாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகம் உள்பட நாடு முழுவதும் கோவில்கள், ரெயில் நிலையங்களை தகர்க்க பாக். பயங்கரவாதிகள் சதி - மிரட்டல் கடிதத்தால் பலத்த பாதுகாப்பு
Published on

சண்டிகார்,

தசரா பண்டிகையையொட்டி, தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் 6 கோவில்கள் மற்றும் 11 ரெயில் நிலையங்களை குண்டு வைத்து தகர்க்கப்போவதாக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டல் கடிதம் எழுதி உள்ளனர். இதனால் நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதில் இருந்து இந்தியாவுக்கு எதிரான அணுகுமுறையை பாகிஸ்தான் அரசியல் தலைவர்களும், பயங்கரவாதிகளும் தீவிரப்படுத்தி உள்ளனர்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், இந்தியாவுக்கு எதிராக போர் மிரட்டல் விடுத்து வருகிறார். பாகிஸ்தானில் ஆயிரக்கணக்கான பயங்கரவாதிகள் இருப்பதாக அவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும், காஷ்மீர் தொடர்பான முடிவுக்கு பிறகு, பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள், குஜராத் மாநிலம் கட்ச் பகுதி வழியாக கடல்மார்க்கமாக இந்தியாவுக்குள் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் நாசவேலையில் ஈடுபடுவதே அவர்களின் நோக்கம்.

இதுபோல், லஷ்கர்-இ- தொய்பா இயக்க பயங்கர வாதிகள் 4 பேர், காஷ்மீர் மாநிலம் ஷோபியான் வழியாக ஜம்முவுக்குள் ஊடுருவ உள்ளதாகவும், அங்குள்ள ராணுவ முகாம்கள் மற்றும் ராணுவ நிலையங்களை குறிவைத்து தாக்க உள்ளதாகவும் உளவுத்துறை தெரிவித்துள்ளது. அத்துடன், நன்கு பயிற்சி பெற்ற சுமார் 250 பயங்கரவாதிகளை பயங்கரவாத இயக்கங்கள் ஊடுருவ தயார்நிலையில் வைத்திருப்பதாகவும் தகவல் கள் வெளியாகி வருகின்றன.

இந்த பரபரப்பான பின்னணியில், தசரா பண்டிகையையொட்டி, நாடு முழுவதும் நாசவேலையில் ஈடுபட பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கமான ஜெய்ஷ் இ முகமது சதித்திட்டம் தீட்டி உள்ளது.

அந்த இயக்கத்தை சேர்ந்த மசூத் அகமது என்பவர் பெயரில் இந்தியில் எழுதி கையெழுத்திடப்பட்ட ஒரு மிரட்டல் கடிதம், கடந்த 14-ந் தேதி, அரியானா மாநிலம் ரோதக் ரெயில் நிலைய சூப்பிரண்டுக்கு கிடைத்தது.

அதில், தசரா பண்டிகையான அக்டோபர் 8-ந் தேதி, ராஜஸ்தான், குஜராத், தமிழ்நாடு, மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், அரியானா ஆகிய 6 மாநிலங்களில் மொத்தம் 6 கோவில்களில் குண்டு வெடிப்புகளை நிகழ்த்த உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், சென்னை, அரியானா மாநிலம் ரேவரி, பெங்களூரு, மும்பை, ஹிசார், குருசேத்திரா, ஜெய்ப்பூர், போபால், கோடா, இடார்சி உள்பட 11 ரெயில் நிலையங்களை குண்டு வைத்து தகர்க்கப்போவதாகவும் கடிதத்தில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்திய ராணுவத்தால் தங்கள் இயக்க பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் வகையில் இந்த வெடிகுண்டு தாக்குதலை நடத்த உள்ளதாக ஜெய்ஷ் இ முகமது தெரிவித்துள்ளது.

இந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள ரெயில் நிலையங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் முக்கிய கோவில்களில் பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com