சல்மான்கான் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு நாளைக்கு ஒத்திவைப்பு

மான் வேட்டையாடிய வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள சல்மான்கான், தனக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவு நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. #BlackBuckPoachingCase
சல்மான்கான் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு நாளைக்கு ஒத்திவைப்பு
Published on

ஜோத்பூர்,

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கி வரும் சல்மான்கான், ஹம் சாத் சாத் ஹெயின் என்ற இந்திப்படத்தில் நடிப்பதற்காக கடந்த 1998-ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் சென்றிருந்தார். அக்டோபர் 1-ந்தேதி இரவு இவர் வாகனம் ஒன்றில் அங்குள்ள காட்டுப்பகுதிக்கு சென்றார்.

அவருடன் நடிகர் சயீப் அலிகான், நடிகைகள் தபு, சோனாலி பிந்த்ரே, நீலம் ஆகியோரும் வாகனத்தில் இருந்தனர். அவர்கள் கங்காணி கிராமப்பகுதியில் சென்ற போது பிளாக்பக் எனப்படும் அரிய வகை மான்கூட்டம் தென்பட்டது. அதில் 2 மான்களை சல்மான்கான் வேட்டையாடியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அரியவகை மான்களை வேட்டையாடியதாக சல்மான்கான் உள்பட 5 பேர் மீதும் ஜோத்பூர் முதன்மை நீதித்துறை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் துஷ்யந்த் சிங் என்ற உள்ளூர்வாசியும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டார். கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கின் விசாரணை அனைத்தும் கடந்த மாதம் 28-ந்தேதி நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து தீர்ப்பை நீதிபதி நிறுத்தி வைத்தார். பின்னர் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

அரிய வகை மான்களை வேட்டையாடிய இந்த வழக்கில் நடிகர் சல்மான்கான் குற்றவாளி என தீர்ப்பளித்தார். எனினும் குற்றம் சாட்டப்பட்ட நடிகர் சயீப் அலிகான், நடிகைகள் நீலம், சோனாலி பிந்த்ரே, தபு ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். மேலும் உள்ளூர்வாசியான துஷ்யந்த் சிங்கும் விடுதலை செய்யப்பட்டார்.பின்னர் சல்மான்கானுக்கான தண்டனை விவரம் பிற்பகலில் அறிவிக்கப்பட்டது. இதில் அவருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து சல்மான்கான் உடனடியாக ஜோத்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு ஜாமீன் கேட்டு பின்னர் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட ஜோத்பூர் நீதிமன்றம், ஜாமீன் மனு மீதான உத்தரவை நாளைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது. இதனால்,சல்மான் கானுக்கு ஜாமீன் கிடைக்குமா? இல்லையா? என்பது நாளைக்கே தெரிய வரும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com