அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக சிபிஐ தலைமை அலுவலகத்தில் கபில் மிஸ்ரா புகார் மனு

அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அக்கட்சியின் பிற தலைவர்களுக்கு எதிராக சிபிஐ தலைமை அலுவலகத்தில் கபில் மிஸ்ரா புகார் மனு அளித்துள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக சிபிஐ தலைமை அலுவலகத்தில் கபில் மிஸ்ரா புகார் மனு
Published on

புதுடெல்லி,

டெல்லியில் ஆட்சியமைத்துள்ள ஆம் ஆத்மி கட்சி சமீபத்தில் அங்கு நடந்த மாநகராட்சி தேர்தலில் படுதோல்வி அடைந்தது. இது கட்சியினரை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியதுடன், கட்சிக்குள்ளேயும் அதிருப்தியை உருவாக்கியது. குறிப்பாக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குமார் விஸ்வாஸ், கட்சித்தலைமையை வெளிப்படையாக விமர்சித்தார்.

அவரை தொடர்ந்து மேலும் பல தலைவர்கள் கட்சித்தலைவர் கெஜ்ரிவாலுக்கு எதிராகவும், குமார் விஸ்வாசுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகின்றனர். இதனால் அவர்கள் மீது கெஜ்ரிவால் நடவடிக்கை எடுத்து வருகிறார். அந்தவகையில் குமார் விஸ்வாசின் ஆதரவாளர் என கருதப்படும் நீர்வளத்துறை மந்திரி கபில் மிஸ்ராவின் மந்திரி பதவி அதிரடியாக பறிக்கப்பட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த கபில் மிஸ்ரா, ஆம் ஆத்மி தலைவர்கள் சிலரின் ஊழல் விவகாரங்களை அம்பலப்படுத்துவேன் என அறிவித்து இருந்தார். அதன்படி நேற்று அவர் கெஜ்ரிவாலுக்கு எதிராகவே ஊழல் குற்றச்சாட்டை கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அரவிந்த் கெஜ்ரிவால் அமைச்சர் சத்யேந்திர ஜெயினிடம் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக கபில் மிஸ்ரா குற்றம் சாட்டினார். இது டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தனது புகார் அடங்கிய மனுவை இன்று டெல்லி சிபிஐ அலுவலகத்தில் கபில் மிஸ்ரா அளித்தார். கபில் மிஸ்ரா அளித்த புகார் மனுவை சிபிஐ பெற்றுக்கொண்டது. முன்னதாக இன்று காலை கெஜ்ரிவால் லஞ்சம் பெற்றதற்கான ஆதாரங்களுடன் புகார் அளிக்க உள்ளதாக கபில்மிஸ்ரா தெரிவித்து இருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

மேலும், 5 ஆம் ஆத்மி தலைவர்கள் வெளிநாட்டு பயணத்திற்கான நிதியை முறைகேடாக பயன்படுத்தியது உள்ளிட்ட 3 புகார்கள் அடங்கிய மனுவை சிபிஐ யிடம் வழங்கியிருப்பதாக கபில் மிஸ்ரா சிபிஐ அதிகாரிகளை சந்தித்த பின்னர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com