கர்நாடகாவில் வருகிற 5-ந்தேதி முதல் அரசு பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம்

சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

பெங்களூரு,

கர்நாடக மாநிலத்தில் 4 அரசு பஸ் போக்கு வரத்து கழகங்கள் உள்ளன. அதாவது பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகம் (பி.எம்.டி.சி), கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் (கே.எஸ்.ஆர்.டி.சி), உள்பட 4 போக்குவரத்து கழகங்கள் உள்ளன. மாநிலம் முழுவதும் 25 ஆயிரம் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இதில் பெங்களூருவில் மட்டும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் இயங்கி வருகிறது. இதில் சுமார் ஒன்றரை லட்சம் டிரைவர்கள், கண்டக்டர்கள், ஊழியர்கள், டிக்கெட் பரிசோதகர்கள், அதிகாரிகள் வேலை பார்த்து வருகிறார்கள். மாநிலம் முழுவதும் 82 பணிமனைகளும், 170 பஸ் நிலையங்களும் உள்ளன.

இந்த நிலையில் அரசு பஸ் ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்தப்படாமல் உள்ளது. மேலும் 38 மாதங்களாக பயணப்படி வழங்கப்படாமல் உள்ளது. இதையடுத்து, சம்பள உயர்வு உள்ளிட்ட பிற கோரிக்கைகளை நிறைவேற்றும்படி அரசுக்கு, போக்குவரத்து கழக ஊழியர்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர்.

ஆனால் சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வரவில்லை. இதுபற்றி அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் அடுத்த மாதம்(ஆகஸ்டு) 5-ந் தேதி காலை 6 மணியில் இருந்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக முடிவு எடுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 7-ந் தேதி போக்குவரத்து கழக சங்கங்களின் நிர்வாகிகளுடன் முதல்-மந்திரி சித்தராமையா ஆலோசனை நடத்தினார். அப்போது அவர்களது கோரிக்கைகள் குறித்து ஒரு வாரத்தில் முடிவு எடுப்பதாக தெரிவித்திருந்தார். ஆனால் ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும் அரசு சார்பில் சம்பள உயர்வு உள்ளிட்டவை குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதன் காரணமாக வருகிற 5-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக போக்குவரத்து கழக ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com