

ஸ்ரீநகர்,
காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் விமான நிலையம் அருகே உள்ள ராணுவ முகாம் மீது ஜெய்ஷ் - இ- முகமது தீவிரவாதிகள் நேற்று முன்தினம் அதிகாலை தற்கொலை படை தாக்குதலில் ஈடுபட்டனர்.
பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகள் தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் பலியானார்.
இந்த நிலையில் தீவிரவாதிகள் மேலும் தற்கொலை படைதாக்குதல் நடத்தலாம் என்றும், இதற்காக 6 முதல் 7 தீவிரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்றும் காஷ்மீர் மாநில போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ஜெய்ஷ் - இ- முகமது இயக்கத்தைச் சேர்ந்த 16 தீவிரவாதிகள் ஆயுதங்களுடன் இந்தியாவுக்குள் ஊடுருவி உள்ளனர். அவர்கள் காஷ் -மீர் மாநிலத்தில் உள்ள அனந்த்நாக், இல்காம், புல்வாமா, சோபியா மாவட்டங்களில் பரந்து விரிந்து பதுங்கி இருந்தனர்.
இந்த தீவிரவாதிகள் கடந்த 26-ந்தேதி புல்வாமாவில் தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டு இருந்தனர். பாதுகாப்பு படை தரப்பில் 8 பேர் பலியானார்கள். கடந்த மாதம் 25-ந்தேதி உரி தாக்குதலில் 4 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றோம்.
இவர்கள்தான் ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தியவர்கள். இந்தியாவுக்குள் ஊடுருவிய இந்த தீவிரவாதிகளில் 6 அல்லது 7 பேர் இன்னும் பதுங்கி உள்ளனர்.
இதில் ஸ்ரீநகரில் மட்டும் 4 தீவிரவாதிகள் இருப்பதாக நம்பப்படுகிறது. இவர்கள் மேலும் சில இடங்களில் தற்கொலை படை தாக்குதலில் ஈடுபடலாம் என்று கருதப்படுகிறது.
இதைத் தொடர்ந்து பாதுகாப்பு படை உஷார் படுத்தப்பட்டுள்ளது இவ்வாறு அவர் கூறியுள்ளார்.