காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து நடவடிக்கை: அ.தி.மு.க. உள்ளிட்ட மாநில கட்சிகள் ஆதரவு

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து நடவடிக்கைக்கு அ.தி.மு.க. உள்ளிட்ட மாநில கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து நடவடிக்கை: அ.தி.மு.க. உள்ளிட்ட மாநில கட்சிகள் ஆதரவு
Published on

புதுடெல்லி,

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் தீர்மானத்தை நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தாக்கல் செய்தார். அவர் பேசி முடித்தவுடன், பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர் சதிஷ் சந்திர மிஸ்ரா எழுந்து ஆதரவு தெரிவித்தார்.

அவர் பேசுகையில், எங்கள் கட்சி இதற்கு முழு ஆதரவு அளிக்கிறது. மசோதா நிறைவேறுவதை விரும்புகிறோம். எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்று கூறினார். அவரது பேச்சை ஆளுங்கட்சி எம்.பி.க்கள் கைதட்டி வரவேற்றனர்.

சிவசேனா உறுப்பினர் சஞ்சய் ரவத்தும் ஆதரவு தெரிவித்தார். அவர் பேசுகையில், சியாம் பிரசாத் முகர்ஜியின் கனவு மட்டுமின்றி, பால் தாக்கரேவின் கனவும் நிறைவேறி உள்ளது. அவர் சொர்க்கத்தில் மகிழ்ச்சியுடன் இருப்பார். 370-வது பிரிவு என்னும் களங்கம் முடிவுக்கு வந்து விட்டது என்று கூறினார்.

அ.தி.மு.க. உறுப்பினர் நவநீத கிருஷ்ணன் ஆதரவு தெரிவித்தார்.

அவர் பேசியதாவது:-

370-வது பிரிவை ரத்து செய்தது குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து, தற்காலிகமானது என்றே அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு ஆகியவற்றில் ஜெயலலிதா உறுதியாக இருந்தார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. எனவே, மத்திய அரசு கொண்டு வந்த மசோதாக்களை அ.தி.மு.க. ஆதரிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர் விஜய்சாய் ரெட்டி ஆதரவு தெரிவித்து பேசினார். அவர் பேசியதாவது:-

சிறப்பு அந்தஸ்து விவகாரம், நீண்ட காலமாக நாட்டை பாதித்து வந்துள்ளது. இது, உள்துறை மந்திரியின் துணிச்சலான நடவடிக்கை. காஷ்மீரை கையாளும் பொறுப்பை சர்தார் வல்லபாய் படேலிடம் நேரு கொடுத்திருந்தால், இப்பிரச்சினையை நாம் விவாதிக்க வேண்டிய அவசியம் உருவாகி இருக்காது. இவ்வாறு அவர் பேசினார்.

பிஜு ஜனதாதளம் உறுப்பினர் பிரசன்னா ஆச்சார்யா, இன்று, காஷ்மீர் மாநிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி ஆகிவிட்டது. இதுபோல், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்திய பகுதி ஆக வேண்டும். நாங்கள் மாநில கட்சியாக இருந்தாலும், எங்களுக்கு நாடுதான் முக்கியம். அரசியல் வேறுபாடுகளை கடந்து, இதை ஆதரிப்போம் என்று பேசினார்.

தீர்மான நகலை கிழித்துப்போட்ட மக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர்களுக்கு அவர் கண்டனம் தெரிவித்தார்.

நியமன உறுப்பினர் ஸ்வபன் தாஸ்குப்தாவும் ஆதரித்து பேசினார்.

ஆனால், பா.ஜனதாவின் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதாதளம் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது. அகாலி தளம், அசாம் கண பரிஷத் போன்ற கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com