

காசர்கோடு,
நாட்டிலேயே கேரளாவில் தான் முதன்முதலாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. தற்போது கொரோனாவை விரட்டியடிப்பதில் முன்னணி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், கேரளாவில் கொரோனா பாதித்த 485 பேரில் 359 பேர் குணமடைந்து மீண்டுள்ளனர். இதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவித்தது.
இந்நிலையில் கேரள மாநிலத்தில் நேற்று புதிதாக 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், கேரளத்தில் 3 சுகாதார பணியாளர்கள் மற்றும் ஒரு பத்திரிகையாளர் உட்பட 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 495 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கேரளாவில் கொரோனா பாதித்து 123 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
கேரளாவில் காசர்கோடு மாவட்ட ஆட்சியராக இருப்பவர் சஜித் பாபு. இவரிடம் பிரபல தொலைக்காட்சி சேனலை சேர்ந்த நிருபர் ஒருவர் கடந்த 19ந்தேதி பேட்டி எடுத்துள்ளார். இந்நிலையில், நிருபருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது நேற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதனை அடுத்து காசர்கோடு ஆட்சியர் பாபுவை தனிமைப்படுத்தி கொள்ளும்படி சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். அவரது கார் ஓட்டுனர் மற்றும் பாதுகாவலர் ஆகியோரையும் தனிமைப்படுத்தி கொள்ளும்படி கூறியுள்ளனர்.
இதேபோன்று நிருபருடன் பணிபுரிந்த புகைப்படக்காரர், வாகன ஓட்டுனர் மற்றும் 2 பணியாளர்கள் என 4 பேரும் தங்களை தனிமைப்படுத்தி கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதன்பின்னர், சமூக இடைவெளி மற்றும் பிற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்கும்படி, தங்களது பணியாளர்களுக்கு ஊடக நிறுவனம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.