கேரள இளம்பெண் ஹதியா திருமணம் செல்லும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

மதம் மாறி திருமணம் செய்து கொண்ட, கேரளாவை சேர்ந்த ஹதியா என்ற பெண்ணின் திருமணம் செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.
கேரள இளம்பெண் ஹதியா திருமணம் செல்லும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
Published on

புதுடெல்லி,

கேரள மாநிலம் கோட்டயத்துக்கு உட்பட்ட வைக்கம் பகுதியை சேர்ந்த அசோகன் மணிபொன்னம்மாள் தம்பதியினரின் மகள் அகிலா. இவர், 2015ம் ஆண்டில் சேலத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் ஹோமியோபதி மருத்துவம் படித்துக் கொண்டிருந்தபோது ஷபின் ஜகான் என்ற இளைஞருடன் காதல் கொண்டார்.

அப்போது, அகிலா இந்து மதத்தில் இருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறி, ஷபின் ஜகானை திருமணம் செய்து கொண்டார். அகிலாவின் தந்தை அசோகன் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு அடிப்படையில், அந்த திருமணம் செல்லாது என்று கேரள ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஷபின் ஜகான் மேல்முறையீடு செய்தார்.

இந்த மனுவின் மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது.

ஹதியாவின் தந்தை அசோகன் தரப்பில் மூத்த வக்கீல் ஷியாம் திவானும், ஷபின் ஜகானுக்காக மூத்த வக்கீல் கபில் சிபலும் ஆஜராகி வாதாடினர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் நேற்று தங்கள் உத்தரவில் கூறியதாவது:

கேரளா ஐகோர்ட்டு, ஹதியா மற்றும் ஷபின் ஜகானுக்கு இடையில் நிகழ்ந்த திருமணத்தை செல்லாது என்று அறிவித்து இருக்கக்கூடாது. ஏன் அப்படி சொல்கிறோம் என்றால், கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் 27ந் தேதி, ஹதியா (எ) அகிலாவை இந்த கோர்ட்டு நேரடியாக ஆஜராக செய்து விசாரணை நடத்தியது. அவர், தான் ஷபின் ஜகானை திருமணம் செய்துகொண்டதை இந்த கோர்ட்டில் உறுதிப்படுத்தினார்.

ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையில் சம்பந்தப்பட்டவர்களின் திருமணம் செல்லுமா, செல்லாதா என்பது பற்றி முடிவு எடுக்க முடியாது. அந்த திருமணம் எத்தனை மோசமானதாக இருந்தாலும் அதனை ரத்து செய்து கோர்ட்டு முடிவெடுத்து இருக்கக்கூடாது. அவர்கள் சிரியா நாட்டுக்கு பயணப்படுகிறார்கள் என்றால், அதனை தடுத்து நிறுத்த வழிகள் உள்ளன. திருமணத்தில் குற்றத்தை பார்க்கக்கூடாது.

எனவே, கேரளா ஐகோர்ட்டு இந்த திருமணத்தை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவு செல்லாது. அந்த தீர்ப்பு தள்ளுபடி செய்யப்படுகிறது. ஹதியாஷபின் ஜகான் திருமணம் செல்லும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com