லாலு பிரசாத்துக்கு சொந்தமான இடங்களில் சி.பி.ஐ. அதிரடி சோதனை

ரெயில்வே ஓட்டல்களுக்கான டெண்டரில் நடந்த முறைகேடு தொடர்பாக லாலு பிரசாத் மற்றும் அவரது மனைவி ராப்ரி தேவிக்கு சொந்தமான இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
லாலு பிரசாத்துக்கு சொந்தமான இடங்களில் சி.பி.ஐ. அதிரடி சோதனை
Published on

புதுடெல்லி,

பீகார் மாநில முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் யாதவ், கடந்த 2004 முதல் 2009-ம் ஆண்டு வரை மத்திய ரெயில்வே மந்திரியாக பதவி வகித்தார். இவரது பதவிக்காலத்தில் ரெயில்வேக்கு சொந்தமாக புரி மற்றும் ராஞ்சியில் இருந்த 2 ஓட்டல்கள் தனியார் நிறுவனத்துக்கு குத்தகைக்கு விடப்பட்டது.

அதாவது இந்திய ரெயில்வே மற்றும் சுற்றுலா கழகத்தின் (ஐ.ஆர்.சி.டி.சி.) கட்டுப்பாட்டில் இருந்த இந்த 2 ஓட்டல்களின் நிர்வாக உரிமை சுஜாதா ஓட்டல் லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்துக்கு குத்தகைக்கு கொடுக்கப்பட்டது. இதற்கான டெண்டர் விடப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக தெரிகிறது.

இந்த குத்தகையை பெறுவதற்காக மேற்கு பாட்னாவில் 3 ஏக்கர் நிலத்தை இந்த நிறுவனம், டிலைட் மார்க்கெட்டிங் என்ற தனியார் நிறுவனத்துக்கு மிகவும் குறைந்த விலைக்கு வழங்கியது. லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தினருக்கு தெரிந்த இந்த டிலைட் நிறுவனம், பின்னர் அந்த நிலத்தை லாலுவின் குடும்பத்தினருக்கு சொந்தமான லாரா புராஜக்ட்ஸ் என்ற தனியார் நிறுவனத்துக்கு வழங்கியது.

2010 மற்றும் 2014-ம் ஆண்டுகளுக்கு இடையே நடந்த இந்த கைமாற்றத்தின் போதும் மிகக்குறைந்த விலைக்கே நிலம் விற்கப்பட்டு உள்ளது. ரூ.32 கோடி மதிப்புடைய இந்த நிலம் வெறும் ரூ.65 லட்சத்துக்கு விற்கப்பட்டதாக தற்போது தெரியவந்துள்ளது.

இந்த வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ. அதிகாரிகள் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது மனைவி ராப்ரி தேவிக்கு சொந்தமான 12 இடங்களில் நேற்று ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அதன்படி பீகார், டெல்லி, ராஞ்சி, புவனேஸ்வர் மற்றும் குருகிராம் ஆகிய பகுதிகளில் இந்த சோதனை நடந்தது. இதில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com