மேற்கு வங்காள தேர்தல் வன்முறை தொடர்பாக மம்தா பானர்ஜி மவுனம் சாதிப்பது கவலை அளிக்கிறது; கவர்னர் குற்றச்சாட்டு

மேற்கு வங்காள தேர்தல் வன்முறை குறித்து மம்தா பானர்ஜி மவுனம் சாதிப்பது கவலை அளிக்கிறது என்று அம்மாநில கவர்னர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேற்கு வங்காள தேர்தல் வன்முறை தொடர்பாக மம்தா பானர்ஜி மவுனம் சாதிப்பது கவலை அளிக்கிறது; கவர்னர் குற்றச்சாட்டு
Published on

அசாமில் அடைக்கலம்

மேற்கு வங்காள சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை முடிவடைந்ததை தொடாந்து, அங்கு பல இடங்களில் கலவரம் வெடித்தது. பா.ஜனதா ஆதரவாளர்கள் குறி வைத்து தாக்கப்பட்டனர். 19 பேர் பலியானார்கள். கூச்பேகர் மாவட்டத்தில், வன்முறையால் வீட்டை விட்டு வெளியேறிய பா.ஜனதா ஆதரவாளர்கள் 175-க்கும் மேற்பட்டோர் அண்டை மாநிலமான அசாமில் உள்ள துப்ரியில் ஒரு பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை மேற்கு வங்காள மாநில கவர்னர் ஜெகதீப் தாங்கர் நேரில் சென்று பார்த்தார்.

பிறகு கவர்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

4 மாநிலங்களிலும், ஒரு யூனியன் பிரதேசத்திலும் சட்டசபை தேர்தல் நடந்தது. ஆனால், மேற்கு வங்காளத்தில் மட்டும் வன்முறை சம்பவங்கள் நடந்தது துரதிருஷ்டவசமானது. ரத்தக்களறி, இனப்படுகொலை, அராஜகம், கொள்ளை, பெண்கள் மீது பாலியல் வன்முறை என்று சம்பவங்கள் நடந்தன. பொதுமக்கள், போலீசாரை பார்த்து பயப்படும் நிலை இருந்தது. போலீசார், திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களை பார்த்து பயந்தனர். பிறகு சட்டத்தின் ஆட்சி எங்கே இருக்கும்?

வீட்டை விட்டு வெளியேறிய மக்களுக்கு அடைக்கலம் அளித்த அசாம் அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவர்களை மனித உரிமை அமைப்புகளோ, தொண்டு நிறுவனங்களோ ஏன் வந்து பார்க்கவில்லை?.

மேற்கு வங்காள தேர்தல் வன்முறை தொடர்பாக முதல்-மந்திரி மம்தா பானர்ஜி எதுவும் கூறாமல் மவுனம் சாதிப்பது எனக்கு கலவை அளிக்கிறது. அவர் தேர்தல் பிரசாரத்தின்போது, தொண்டர்களை தூண்டிவிடும்வகையில் பேசினார். மத்திய படைகளுக்கு எதிராக பெண்களை தூண்டி விட்டார். அவரது பேச்சு, அவர் வகிக்கும் பதவிக்கு பொருத்தமற்றது. ஒரு முதல்-மந்திரி இப்படி செய்வதை பார்ப்பது எனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது.

இப்படி வேதனையுடனும், காயத்துடனும் கவர்னர் பதவி வகிக்க வேண்டி இருக்கும் என்று நான் கற்பனை கூட செய்து பார்க்கவில்லை. மாநில அரசானது நேர்மறையாக நடந்து கொள்ள வேண்டும். ஆனால், இந்த அரசு, எப்போதும் மத்திய அரசு, கவர்னர், மத்திய படைகள், தேர்தல் கமிஷன் ஆகியவற்றுடன் மோதலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. இது, அரசியல் சட்டத்தின் ஆன்மாவுக்கு எதிரானது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com